Wednesday 6 May 2015

உள்நாட்டு வணிகத்தைப் பாதுகாப்போம்! உலக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்: வணிகர் மாநாடு வலியுறுத்தல்.

மாநாட்டில் வணிகர் சங்க பேரவையின் மாநிலத் தலைவர் .வெள்ளையன் பேசினார்.
உள்நாட்டு வணிகத்தைப் பாதுகாக்க உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வலியுறுத்தி வருகிற ஜுலை மாதம் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பேரணியும் சுதந்திர தினமான வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள் முன்பு உலக வர்த்தக ஒப்பந்த நகல்எரிப்பு போராட்டமும் நடத்த தஞ்சாவூரில் நடைபெற்ற இந்த வணிகர் தின மாநில மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை அறிவித்துள்ளது.மே 5ம் தேதி வணிகர்தினமாகும். இதையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் சார்பில் 32வது வணிகர் தின மாநில மாநாடு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நம்மாழ்வார் நினைவுப் பந்தலில் செவ்வாயன்று நடைபெற்றது. தேசியக் கொடி மற்றும் வணிகர் சங்க கொடிகளை மாநிலத் தலைவர் .வெள்ளையன் ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார்.இந்த மாநாட்டில் அகில இந்திய வர்த்தக சங்கத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சியாம்பிஹாரி மிஸ்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள 32 மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான வணிகர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில் சில்லரை வணிகத்துறையை அந்நிய நிறுவனங்கள் கைப்பற்ற முயற்சிப்பதை மத்திய அரசு ஊக்குவிப்பதை கைவிடவேண்டும், ஈரோட்டில் கோகோ கோலா கம்பெனி அனுமதியை ரத்து செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, நெய்வேலியைச் சேர்ந்த 8 வயதுசிறுமி அபிராமி பெப்சி குடித்து இறந்து போனது குறித்து விசாரணை நடத்த வேண்டும், கோக்-பெப்சிக்கு தமிழகத்தில் தடைவிதிக்க வேண்டும்,இணையதள வர்த்தகத்தினால் அரசுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், உள்நாட்டு வணிகத்தைப் பாதுகாக்க உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பேரணி நடத்தவும் சுதந்திர தினமான வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள் முன்பு உலக வர்த்தக நகல் எரிப்பு போராட்டம் நடத்தவும் இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

No comments: