“8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம்” என்ற கோஷத்தை முன்வைத்து போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக கடந்த 130 ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.1856 ஏப்ரல் மாதம் 21ஆம் நாள் முதன்முதலில் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று வேலை நிறுத்தம் செய்து போராடிய பெருமை ஆஸ்திரேலிய தொழிலாளர்களை சாரும். இதே கோரிக்கைக்காக இரண்டாவது வேலை நிறுத்தம் செய்த பெருமை இந்தியத் தொழிலாளர்களை சாரும். 1862-ல் “8 மணி நேர வேலை” கோரிக்கையை வலியுறுத்தி 1200 ரயில்வே தொழிலாளர்கள் கல்கத்தா நகரிலே வேலை நிறுத்தம் செய்தனர். இதைத் தொடர்ந்து 1863-ல் மும்பையில் நாவிதர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் செய்தனர். அதே ஆண்டு கல்கத்தாவில் பல்லக்கு தூக்குபவர்கள் தாங்கள் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர். 1873-ல் கசாப்பு கடைக்காரர்கள் சென்னையில் வேலை நிறுத்தம் செய்தனர்.
இந்தியாவில் முதன்முறையாக 1923 மே மாதம் 1ஆம் தேதி சென்னை கடற்கரையில் தோழர் சிங்காரவேலு அவர்களால் மே தினம் கொண்டாடப்பட்டது. தோழர் சிங்காரவேலர் அவருடைய மகளின் சிவப்பு நிறப் புடவையை கிழித்து மே தினக் கொடியை ஏற்றினார்.
1908-ல் இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம் நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் அவர்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் விதித்த ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை எதிர்த்து பஞ்சாலைத் தொழிலாளர்கள் நாடு முழுவதும் 5 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்தனர். போலீசாரின் மற்றும் இராணுவத்தினரின் அடக்குமுறையையும் எதிர்கொண்டு தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடினர். கண்பத் கோவிந்த் என்ற தொழிற்சங்கத் தலைவர் இப்போராட்டத்தில் கொல்லப்பட்டார். இப்போராட்டத்தை உற்றுநோக்கிய மாமேதை லெனின், இந்தியாவின் தொழிலாளி வர்க்கத்தை மிகவும் பாராட்டினார். இப்படி பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இந்தியா வில் தொழிலாளர் நலச் சட்டங்களே ஒன்றன்பின் ஒன்றாக இயற்றப்பட்டன. 1926-ல் தான் தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்பட்டது. 1947-ல்தான் தொழிற் தகராறு சட்டம் இயற்றப்பட்டது.
No comments:
Post a Comment