Sunday 31 January 2016

என்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்குத் தெரிந்துவிட்டது...

சொந்த புத்தியும் இருக்காது.. சொல்கிற புத்திமதியையும் கேட்காது.. ஒரு வீட்டில் அடங்காமல் அடாவடியாக ஊதாரியாக ஒருவன் இருந்தால், ‘‘இவன என்ன பண்றதுன்னே தெரியலியே’’ என்று பெற்றோர்கள் நொந்து கொள்வார்கள். மற்றவர்களும் அப்படித்தான் சொல்வார்கள்.வீட்டில் ஒரு அடாவடி போல நாட்டில் ஓர் அடாவடி அரசு இருந்தால் அதுபற்றியும் இப்படித்தானே சொல்ல வேண்டியிருக்கும்.சென்னை உயர்நீதிமன்றத்திலே ஒரு பொதுநல வழக்கு. தமிழகத்தில் மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகள் அடுக்குமாடிக் கட்டிடங்களாக உள்ளன.
மருத்துவக் கல்லூரி கட்டிடங்களும் இப்படித்தான். தீ விபத்துகள் ஏற்பட்டால் தடுப்பதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி இவை கட்டப்பட்டுள்ளனவா என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு இயக்குநரிடமிருந்து அறிக்கை பெற்று குறைபாடுகள் இருந்தால் நீக்குவதற்கு உத்தரவிடவேண்டும் என்பது நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள விண்ணப்பம்.இந்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அசைந்து கொடுக்கவில்லை அதிமுக அரசு.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது மீண்டும் அவகாசம் கேட்கப்பட்டது.தனிநபராக சொத்துக்குவிப்பு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்த அனுபவம் பெற்ற ஜெயலலிதா தலைமையில் தானே அரசு அமைந்திருக்கிறது. அதுவும் வழக்கை இழுத்தடிக்கத்தானே செய்யும்!பல வழக்குகளில் இழுத்தடிப்பைப் பார்த்துப் பார்த்துப் பொறுமையிழந்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச், தனது அதிருப்தியைப் பதிவு செய்தது.‘‘சாமானியர்கள் வழக்கு தாக்கல் செய்த பிறகுதான் அரசு நடவடிக்கை எடுக்கிறது. தானே முன்வந்து அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை’’ என நீதிபதிகள் கவலையை வெளிப்படுத்தினர்.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு செயல்படாத அரசு என்பதற்கு இதைவிடநற்சான்றுஇருக்க முடியாது.பொதுநலன் சார்ந்த இந்த வழக்கில் பல முறை அவகாசம் கொடுத்தும் அரசு தரப்பு பதில் மனுதாக்கல் செய்யாததால் ‘‘சுகாதாரத்துறை செயலாளர், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர், தீயணைப்புத் துறை இயக்குநர், இந்திய மருத்துவக் கவுன்சில் செயலாளர்’’ ஆகியோருக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதேபோல் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான வழக்கிலும் இரண்டு முறை அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகளுக்கு அபராதம் என்றால் அது அரசுக்கான அபராதம்தான். அந்த அளவுக்கு அதிமுக அரசுதண்டம்கட்டும் அரசாக உள்ளது.இந்த அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றமே நொந்து கொள்ளும் வகையில்தான் இருக்கிறது. தலைமை நீதிபதியின் மனவேதனையின் உச்சபட்ச வெளிப்பாடான வாசகங்கள் இவை:``இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய எத்தனை முறை அவகாசம் வழங்குவது? இன்னும் 4 மாதங்கள் தான் இருப்பேன் என்று நினைக்கிறீர்களா? (தலைமை நீதிபதி 4 மாதத்தில் ஓய்வு பெறவிருக்கிறார்) எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்.
பொது நலன் வழக்குகளில் தமிழக அரசு உரிய பதில் மனு தாக்கல் செய்வது இல்லை. மியாட் மருத்துவமனையில் 18 பேர் பலியான பிறகும் அரசு மெத்தனமாக நடந்து வருவது வேதனை அளிக்கிறது.கடைசி நேரத்தில் பதில்மனு தாக்கல் செய்கிறார்கள் அதுவும் முறையாக இல்லை. தமிழக அரசை என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை’’ஒரு அரசைப் பார்த்து நீதிமன்ற நீதிபதிகள் இப்படி நொந்து கொள்கிறார்கள் என்றால் அது எவ்வளவு மோசமான அரசாக இருக்க வேண்டும்!?நீதிமான்களே! நியாயவான்களே! தமிழக அரசை என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை என்று கவலைப்படுவோரே! கவலையைவிடுங்கள். இந்த அரசை என்ன செய்ய வேண்டும் என்பது மக்களுக்குத் தெரிந்துவிட்டது.
செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமைகளே அறமாகி நிற்குமென்றால் அதற்குக் காரணமான அரசைத் தூக்கி எறிவதுதான் ஒரே வழி. அதற்குத் தயாராகிவிட்டோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாகத்தான் நான் மாடக் கூடல் எனும் மதுரை நகரில் எழுச்சியோடு கடலென மக்கள் திரண்டிருந்தார்கள் - மக்கள் நலக்கூட்டணியின் மாற்று அரசியல் மாநாட்டில்! அடாவடி அரசின் முடிவுக்கு மதுரையில் முன்னுரை எழுதப்பட்டுவிட்டது.-மயிலைபாலு

No comments: