Sunday 17 January 2016

மார்க்சை மதிக்கிற மக்கள் எங்கும் இருப்பார்கள் . . .

மார்க்சியத்தின் தற்போதைய பொருத்தம் பற்றிய சர்வதேச மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றது. மாறி வரும் உலகச் சூழ்நிலையின் பின்னணியில் உலகில் உள்ள பல்வேறு கம்யூனிஸ்ட் அமைப்புகளிடையே ஓரளவிற்கு கருத்துப் பரிமாற்றம் இருக்க வேண்டும் என்ற கட்சியின் மத்தியக் குழுவின் ஆலோசனைக்கு இணங்கவே இந்த மாநாடு நடைபெற்றது. எனினும் முதலாளித்துவ பத்திரிகைகள் இந்த மாநாடு பற்றி ஏராளமான புரளியை எழுதின.கூட்டாக அறிக்கை எதையும் விடவோ அல்லது பொது மேடை ஒன்றை உருவாக்கவோ எந்தவிதமான முயற்சியும் இந்த மாநாட்டின் போது எடுக்கப் படவில்லை.1993 மே 5 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் 20 கட்சிகள் பங்கேற்றன. சிபிஐ சார்பில் இந்திரஜித் குப்தா, எம்.பரூக்கி, .பி.பரதன் ஆகியோரும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நான்(ஜோதிபாசு) , சீத்தாராம் யெச்சூரி, சுர்ஜித், பி.ராமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டோம்.சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்த மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியது. ருஷ்ய கம்யூனிஸ்ட் தொழிலாளர் கட்சியும் செய்தி அனுப்பியது. ஜனநாயக கொரியா நாட்டு ஜனாதிபதியும் தனது வாழ்த்துக்களை அனுப் பியிருந்தார்.
மார்க்சியத்தின் இன்றைய பொருந்தும் தன்மை பற்றி கட்சிகளிடையே எந்தவித மான கருத்து வேறுபாடும் இல்லை. எனினும்விவாதம் என்பது முற்றிலும் அவசியமான தாக இருந்தது. மார்க்சியத்தின் அடிப்படைதத்துவமும் மார்க்சிய விஞ்ஞானமும் சோவியத் நாட்டில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணமல்ல; அதைச் செயல் படுத்துவதில்தான் தவறு அடங்கியிருந்தது என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம். ஏகாதி பத்தியத்தை முற்றிலுமாக முறியடிப்பதற்கான அவசியம் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ப தையும் நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டோம். நிறைவாக இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பும் வகையில் பொது நிகழ்ச்சி ஒன்று நேதாஜி உள் விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது.அந்த அரங்கமே மக்களால் நிரம்பி வழிந்தது. இந்த நிகழ்ச்சியின் போது ஜெர்மன் நாட் டைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் கூறியது என் நினைவிற்கு வருகிறது. “மார்க்ஸ் பிறந்த மண் ணிலிருந்து நான் வருகிறேன்.
அதுகுறித்து நாங்கள் மிகுந்த பெருமையும் அடைகிறோம். ஆனால் அதே வகையில் அவரை மதிக்கின்ற மக்கள் கொல்கத்தாவிலும் இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இது முற்றிலும் மாறுபட்ட புத்துணர்ச்சியூட்டும் ஓர் அனுபவமாகும்.
ஜனவரி-17,தோழர்.ஜோதிபாசு நினைவு நாள் (தோழர் ஜோதிபாசு சுயசரிதை நூலிலிருந்து)

No comments: