Sunday 8 May 2016

May-8,அபூர்வ மனிதன் வி.பி.சிந்தன் ! நினைவு நாள்...

மே 8-ந் தேதி தோழர் வி.பி. சிந்தன் அவர்களின் நினைவு நாள். 1987ம் ஆண்டு இதே நாளில் அவர் மறைந்தார்.அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் இந்திய மார்க்சிய இயக்கத்தின் முதுபெரும் தலைவர் பி.டி. ரணதிவே அவர்கள்தோழர் வி.பி. சிந்தன் ஒரு அபூர்வ மனிதன்” என்று புகழ்ந்து, போற்றி தனது அஞ்சலியைத் தெரிவித்தார்.விடுதலைப் போரின் தாக்கத்தில் தேசிய இயக்கத்தின் போராளியாய் களத்திற்கு வந்த இளம் மாணவன் தான் மறையும் போது தனி உயரத்தில் நின்ற வி.பி. சிந்தன் என்கிற ஆளுமை. “போராட்டமே வாழ்க்கையாய்” என்ற வார்த்தைகளுக்கு உண்மையான இலக்கணமாக அவரது வாழ்க்கை அமைந்தது.ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் கேரளப் பகுதியில் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து கம்யூனிஸ்ட்டாய் சிந்தன் பரிணமித்துவிட்டார். அவரைப் பார்த்து இயக்கத்தின் தேவை உன்னை தமிழ்ப்பகுதிக்கு அழைக்கிறது; இயக்கம் உன்னிடம் எதை எதிர்பார்த்தாலும் அதைத் தருகிற மார்க்சிய புரிதலும் அர்ப்பணிப்பும் உனக்கிருக்கிறது; எனவே உடனே சென்னைக்கு புறப்படு என்று கட்சியின் முடிவை தோழர் கிருஷ்ணபிள்ளை அவர்கள் கூறினார். அதை அக்கணமே ஆணையாய் ஏற்றுக் கொண்டு அவர் புறப்பட்டார். அமைப்பின் தேவைக்கு தனது சொந்த நலன்களை உட்படுத்திக் கொள்வது என்பதற்கு உயர்ந்த உதாரணம் ஆனார். ஒரு முழுநேர ஊழியர் எப்படி ஒரு முழுநேரப் புரட்சிக்காரன் என்பதற்கு எடுத்துக்காட்டாய் கடைசி வரை வாழ்ந்தார். ஸ்தாபன ஒழுக்கம், கட்டுப்பாடு என்பதை எவ்வளவு ஆழமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட போதும் பேணிக் காத்தார்.அவரது மார்க்சியப் புரிதலும், அடிப்படைத் தத்துவக் கோட்பாடுகளில் அவருக்கு இருந்த விசாலமான ஞானமும் வியப்பிற்குரியது. தொழிலாளி வர்க்கப் புரட்சி சாத்தியம், சோசலிசமே அடுத்த சமூக மாற்று என்பதில் அவருக்கு இருந்த ஆழ்ந்த நம்பிக்கைக்கு இதுவே அடிப்படை. அவர் தனது வகுப்புகளில் மார்க்சிய தத்துவத்தை விரும்பி போதிப்பார். இந்திய மரபு வழிப்பட்ட பொருள்முதல்வாதத்தில் அவருக்கு ஆழ்ந்த தேர்ச்சி இருந்தது. சமஸ்கிருதத்தையும் அவர் அறிந்திருந்தார். இதுபற்றி அவரது சிறு பிரசுரங்களும் வந்துள்ளன. அவரது தத்துவ வகுப்புகளில் வாழ்க்கையின் மீதும், மாற்றங்களின் மீதுமான நம்பிக்கை சாரமாய் உள்ளிறங்கும். அவரது போதனை மிகவும் இயல்பாகவும், இயற்கையாகவும் இருக்கும். குறிப்பாக நடப்பு போராட்டங்களிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் உதாரணங்களையும் படிப்பினைகளையும் தருவார். அவரது தனித்தன்மைகளில் இதுவும் ஒன்று. தத்துவத் தெளிவை ஊட்டுவதில் அவரது பங்களிப்பு மகத்தானது.1964ல் கட்சி பிரிந்த பிறகு திருத்தல்வாதத்தை எதிர்த்த கொள்கைப் போரில் அவர் பெரும்பங்காற்றினார். இந்திய ஆளும் வர்க்கம் பற்றிய நிர்ணயிப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை உருவாவதிலும் அதுபற்றிய தெளிவை அணிகளுக்கு போதிப்பதிலும் அவர் கட்சி ஸ்தாபனத்தில் பெரும் பங்காற்றினார்.அவர் பிரதானமாக தொழிற்சங்கப் பணிக்கு வந்த போது சென்னை நகரில் நமது தொழிற்சங்க இயக்கம் மிகவும் சிறியதாக இருந்தது. பெரும்பாலான தொழிற்சங்கங்கள் மற்றவர்கள் தலைமையில் இருந்தது. அவர் தொழிற்சங்க இயக்கத்தில் நுழைந்த நேரத்தில் சென்னை சுற்றுப்புற தொழிற்சாலைகளில் பெரும் கொந்தளிப்பான நிலை இருந்தது. தொழிலாளர்கள் சட்ட உரிமைகள், பணி நிரந்தரம் போன்றவை கூட மறுக்கப்பட்டு கடும் அடக்குமுறைக்கு ஆளாகிக் கொண்டிருந்தார்கள். முதலாளிகள் தங்களுக்கு ஒத்துப்போகிற தலைவர்களைக் கொண்ட சங்கம் அமைத்துக் கொண்டு அதனோடு தான் பேசுவேன் என்றார்கள். இந்த அடக்குமுறையை எதிர்த்து, தொழிலாளி தான் விரும்பிய சங்கத்தை அமைத்துக் கொள்ளவும், தனக்கு ஏற்பான தலைமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவுமான போராட்டங்கள் வெடித்தன.அந்தத் தருணத்தில் இந்தப் போராட்டங்களை இணைத்து ஒருமுகப்படுத்தவும், சகோதர ஆதரவு முழக்கங்களை முன்வைக்கவும், கூட்டுப் போராட்டத் தேவையை உணர்த்தவும், அரசு முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதை அம்பலப்படுத்தவும், அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை கூட்டாக முன்னெடுக்கவுமான பெரும்பணியை ஆற்றியவர் வி.பி.சி. தான். அதற்காக ஆளும் வர்க்கத்தின் கொலைவெறித் தாக்குதலையும் அவர் சந்திக்க நேர்ந்தது, அதிலிருந்து மீண்டெழுந்து தன்பணியினை தொடர்ந்தார். அவரது நெடிய அரசியல் வாழ்க்கையால், அர்ப்பணிப்பால் அவருக்கு இருந்த மரியாதையும், மற்றவர்களாலும் மறுக்க முடியாத நேர்மையும், தியாகமும் அவரை ஒரு ஆளுமையாக உயர்த்தியிருந்தது. இதன் மூலம் தொழிற்சங்க இயக்கத்திற்கு புத்துணர்ச்சியை அவரால் பாய்ச்ச முடிந்தது. ஒரு தொழிற்சாலையில் ஒரு சங்கம் என்று சென்னையில் வேர்விட்டிருக்கிற அந்த நிலைமையை இவரது பரந்த பார்வை உருவாக்கியது. கட்சி என்பதை தொழிற்சங்க கட்சி என்று புரிந்து கொள்ளக் கூடாது. தொழிலாளி வர்க்க கட்சி என்பதை அவர் அழுத்தமாகக் கூறுவார். தொழிலாளர் அனைவரும் நமது அடிப்படை வர்க்கம் என்று கூறுவார். அவர்களை அரசியலால் அணி திரட்டுவதில் தான் புரட்சியின் வெற்றியிருக்கிறது என்று கூறுவார். அவர் காலத்தில் இருந்த அதே நிலையை இப்போது உலகமய சூழலில் நாம் எதிர்நோக்குகிறோம். அவரது அணுகுமுறைகள் இன்றைய போராட்டங்களில் வழிகாட்டும் ஒளியாய் இருக்கின்றன.ஸ்தாபனப் பிரச்சனைகளில் வருத்தப்படுவோர், கோபமுற்றோர், சோர்வுற்றோர், ஒதுங்கி நிற்போர் போன்றவர்களை அவர் உரிமையோடு கடிந்து கொண்டு திருத்த முற்படுவார். அவர் கடைசியில் சொல்வது இதுதான்.“நீ யாருக்கும் அடிமையல்ல; ஆனால் ஸ்தாபனக் கட்டுப்பாடுகளைப் பின்பற்று; புரட்சிக்கு விசுவாசமாக இரு”.அவரது எல்லா செயல்களிலும் நடைமுறை சாத்தியப்பாடுகள் என்பதும் பொருத்தமாக கலந்திருக்கும். அவரது எந்த உரையிலும் நடைமுறை பிரச்சனைகளை சக்தியோடு எடுத்து வைத்து புரட்சிகர முழக்கத்தோடு தான் முடிப்பார்.சோசலிச மாற்றுக்கு மக்களைத் திரட்டுவோம்! புரட்சியை முன்னெடுப்போம்!

No comments: