Wednesday, 19 March 2014

என்றென்றும் . . .மக்கள் மனதில் தோழர்.இ .எம்.எஸ்.

மார்ச் 19: .எம்.எஸ். நினைவுதினம் . . .
இந்திய பொது உடமை இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரும் மிகச்சிறந்த மார்க்சிய அறிஞரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான தோழர் .எம்.எஸ். நம்பூதிரிபாத் 1909 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி பிறந்தார். 1998ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் நாள் மறைந்தார். இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்கள் பட்டியலில் அவர் இடம்பெறுவார் என்பதில் இருகருத்து இருக்க முடியாது.
மாபெரும் ஆளுமை
.எம்.எஸ். என்ற மாபெரும் ஆளுமைக்கு பல பரிமாணங்கள் உண்டு. அவர் தனது இளம் வயதில் சமூக சீர்திருத்தப் போராளி. கல்லூரிப் பருவத்தில் தேச விடுதலை இயக்கத்தில் களம் இறங்கியவர். கேரளாவில் செயலாற்றிய இந்திய தேச விடுதலை இயக்கப் போராளிகளுக்குத் தலைமை தாங்கியவர் அவர். மேலும், சமூக அறிவியலான மார்க்சிய கண்ணோட்டத்தை கற்றறிந்து, ஏற்று, தனது சக போராளிகளையும் பொது உடமை இயக்கத்தின்பால் ஈர்த்து, கேரளாவில் வலுவான கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கி வளர்த்தவர் அவர். 1957இல் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து அன்றைய ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேரள மாநிலசட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற்றுஆட்சி அமைத்த பொழுது மாநில முதல் வராகப் பொறுப்பேற்று வரலாறு படைத்தவர்.முதலாளித்துவ ஜனநாயக அரசியல் அமைப்பில் ஆளும் வர்க்க சக்திகளை தேர்தல் களத்தில் தோற்கடித்து, கணிசமான மக்கள் வாழும் பிரதேசத்தில் ஆட்சியை கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது இதுவே உலகில் முதல்முறை ஆகும். அவரது தலைமையில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவை நிலச்சீர் திருத்தம், கல்வித்துறையில் முற்போக்கான மாறுதல்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனை களை நிகழ்த்தியது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத மதவாத, சாதிய, நிலப்பிரபுத்துவ, பிற்போக்குக்கும்பல் இணைந்து அந்த ஆட்சியைக் கவிழ்த்தது. நேருவின் தலைமையிலான காங்கிரசும் இந்த முயற்சிக்கு துணை நின்றது.
மகத்தான மக்கள் பணி
கட்சியின் தலைவராகவும் மாநில முதல்வராகவும் இருந்து கொண்டே, தினமும் கட்சி பத்திரிகையில் கட்டுரையும் எழுதி வந்தவர் தோழர் .எம்.எஸ். நாளிதழ்களில் எழுதியது மட்டுமல்ல, தொடர்ந்து ஆழமான தத்துவார்த்த, வரலாற்று, சமூக, அரசியல் பொருளாதாரத்துறைகள் சார்ந்த கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதினார். தனது இறுதிக்காலம் வரை எழுதிக்கொண்டே இருந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாறு, கேரளம் நேற்று இன்று நாளை, மகாத்மாவும் அவரது இசமும், இந்தியதிட்டமிடுதலின் நெருக்கடி, அரசியல் இந்தியா: நெருக்கடியில் இருந்து பெரும் குழப்பத்திற்குள், வேதங்களின் நாடு உள்ளிட்ட ஏராளமான நூல்களை அவர் எழுதியுள்ளார். களப் போராளி; பொது உடமை இயக்கத்தின் அகில இந்திய தலைவர்; மாநில முதல்வர்; கலை இலக்கிய விமர்சகர் மற்றும் ஆய்வாளர்; சிறந்த நிர்வாகி என்று தனது வாழ்நாளின் வெவ்வேறு கட்டங்களிலும் தனது பன்முக ஆளுமையை ஆரவாரமின்றி இயக்கத்தை வலுப்படுத்தவும் உழைக்கும் மக்கள்வாழ்வில் முன்னேற்றம் காணவும் பாடுபட்டவர் தோழர் .எம்.எஸ்.தத்துவத்தையும் நடைமுறையையும் இணைத்த கம்யூனிஸ்ட் ஆசான்ஒன்றாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும்பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றி வந்தபொழுதும் தத்துவார்த்தப் பிரச்சனைகளில் ஆய்வு மேற்கொண்டு தீவிரமாக சிந்தித்து, மார்க்சிஸ்ட் கட்சி பல ஸ்தூலமான பிரச்சனை களில் ஒரு சரியான நிலைபாடு எடுப்பதற்குதோழர் .எம்.எஸ். ஆற்றிய பங்கு மிகச்சிறப்பானது. பல விசயங்களில் அவர் புதிய தடம் பதித்தார். சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவு பற்றியும் சமகாலத்தில் சமூக ஒடுக்குமுறையை எதிர்த்தும் வர்க்கச் சுரண்டலை எதிர்த்தும் போராடவேண்டிய அவசியத்தை .எம்.எஸ். வலியுறுத்தினார்.
இந்திய வரலாற்றில் பண்டைய சமூகத்தில் இருந்து வர்க்க சமூகம் உருவான பிரத்யேக சூழ்நிலைகள் பற்றியும் .எம்.எஸ். ஆய்வு மேற்கொண்டார். கேரள மாநிலத்தின் பிரத்யேக நில உடைமை உறவுகளைப் பற்றி அவருக்கு இருந்த நுண்ணறிவு இந்திய நாட்டிலேயே முதலாவதாக சிறந்த நிலச்சீர்திருத்த மசோதாவை கேரள சட்டப்பேரவையில் முதல் கம்யூனிஸ்ட் அரசின் சார்பாக முன்வைக்க உதவியது. மக்கள் மீதும் அவர்களது ஜனநாயக உணர்வின் மீதும் .எம்.எஸ். மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். முதலாளித்துவக் கட்சிகள் உள்ளாட்சி ஜனநாயகத்தின் மீது உள்ளார்ந்த நம்பிக்கை வைக்கவில்லை என்பதை சரியாக கணித்த .எம்.எஸ். பொது உடமை இயக்கத்தின் சார்பாக உள்ளாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தி 1978இல் அவர் உறுப்பினராக பங்கேற்ற அசோக்மேத்தா கமிட்டியில் மறுப்பு குறிப்பு அளித்தார். பின்னர், ராஜீவ்காந்தி முன்வைத்த உள்ளாட்சி அமைப்பு பற்றிய கருத்துக்களை மிகச்சரியாக விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். 1990களில் இடதுஜனநாயக முன்னணிஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமானமக்கள் திட்டமிடுதல்முயற்சிகளுக்கு .எம்.எஸ். தந்த தத்துவ மற்றும் நடைமுறை வழிகாட்டுதல் அவ்வியக்கத்தின் சாதனைகளுக்கு ஒரு முக்கியகாரணமாக அமைந்தது.தோழர்..சுர்ஜித் இ.எம்.எஸ்.பற்றி குறிப்பிடுவது,முதல் அகில இந்திய மாநாட்டிலிருந்து அவர் பங்கேற்ற இறுதி மாநாடு வரை அவரது மகத்தான பங்களிப்பு தொடர்ந்தது. அதன்பின்பும், இயற்கை எய்தும் வரை அவர் உழைப்புக்கு ஓய்வு தரவில்லை.நம் அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும், மார்க்சிய ஒளிவிளக்காகவும் தோழர் .எம்.எஸ். ஒளிர்கிறார்.

No comments: