Wednesday 24 December 2014

யாருக்கு சேவை செய்ய இத்தனை அவசரம்?

காப்பீட்டுத்துறையில் அந்நிய மூலதனத்தை 26சதவீதத் திலிருந்து 49சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத நிலையில், நாடாளுமன்றக்கூட்டம் முடிந்த அடுத்த நாளே, நாடாளுமன்ற ஜனநாயகத்தை காலில்போட்டு மிதிக்கும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அந்நியர்களை மகிழ்ச்சிப் படுத்த எத்தகைய கீழான நிலைக்கும் மோடி அரசு இறங்கத் தயங்காது என்பதற்கு இது மேலும்ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.மேலும் மருத்துவ கருவிகள் துறையில் நூறு சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்கவும் நாட்டின் இயற்கை வளமான நிலக்கரிச் சுரங்கங் களை சூறையாடிய கொள்ளையர் களுக்கு மீண்டும் அதற்கான அனுமதியை வழங்கவும் அவசரச் சட்டம் பிறப்பிக்கவும் BJP தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது  இந்த மூன்று விசயங்களில் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் அளவுக்கு என்ன அவசரம் என்பதை புரிந்துகொள்வது சிரமம் அல்ல. இந்திய காப்பீட்டுத்துறையை முற்றாக கபளீகரம் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அந்நிய முதலாளிகள் கடந்த பல ஆண்டுகளாக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விருந்து வைக்கத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அவசரச் சட்டம் பிறப்பிப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள அருண்ஜெட்லி, நாடாளுமன்ற மாநிலங்களவை பொறுப்புக்குழு முடிவுக்கேற்பவே அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அந்தப் பொறுப்புக்குழுவில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட நான்கு கட்சிகள் மாற்றுக் குறிப்பை தந்திருந்தன. எனவே இந்த முடிவு ஏகமனதானதல்ல. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்தால் அதை நிறைவேற்ற எங்களுக்கு வேறு வழிகள் உள்ளன என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருந்தார். அந்த வழி என்ன என்பது இப்போது புலனாகிவிட்டது. அந்நியர்களை வாசல் வழியாக அழைத்து வர முடியாத நிலையில் கொல்லைப்புற வழியாக கொள்ளையடிக்க அழைத்து வந்துள்ளனர்.அதேபோன்று நிலக்கரிச் சுரங்கங்களை பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் கொள்ளை யடிப்பதை உச்சநீதிமன்றத்தின் விசாரணை தற்காலிகமாக தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த தடையை நீக்கி நிலக்கரிச் சுரங்கங்களை மீண்டும் சூறையாட அனுமதிப்பதற்கு மோடி அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக நிலக்கரிச் சுரங்கங்கள் தொடர்பான அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க முடிவு செய்துள்ளது. மருத்துவக் கருவிகள் துறையில் நூறு சதவீத அந்நிய முதலீடு என்பதும் அந்நியர் களுக்கு இனிப்பான செய்தியாக இருக்கும்.காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டை அதிகரித்தால் அந்தத் துறை செழிக்கும் என்ற உயிரற்ற, சொத்தை வாதத்தையே மீண்டும் அருண்ஜெட்லி முன்வைத்துள்ளார். அந்நிய மூல தனம் என்கிற கானல்நீரை நம்பி இந்தியாவின் உயிரோட்டத்திற்கு காரணமாக உள்ள இரத்த நாளங்களை அறுத்தெறிய முயலும் மோடி அரசின்துரோகச் செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது...---தீக்கதிர் 

No comments: