Saturday 13 December 2014

பிடல் காஸ்ட்ரோவிற்கு அமைதி விருது -மக்கள் சீனம் ...

நோபல் பரிசுக்கு இணையான சீனாவின் கன்பூசியஸ் அமைதி விருது, கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், கியூப புரட்சியின் நாயகனுமான பிடல்காஸ்ட்ரோவுக்கு வழங்கப்படுகிறது.பிடல் காஸ்ட்ரோ ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தொடர்ந்து உலகில் அணு ஆயுத போர் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு குழுக்களுடன் அணு ஆயுத போரினை இந்த பூமியில் நடைபெறவிடாமல் தடுப்பது குறித்து தொடர்ந்து பேசியும்,
ஆலோசித்தும் வருகிறார். அணு ஆயுதபோருக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை ஆக்கப்பூர்வமாக பதிவு செய்து வருகிறார். 88 வயதான நிலையில் அணு ஆயுத போருக்கு எதிரான தனது பணியை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். இதனடிப்படையில் அமைதிக்கான நோபல் பரிசிற்கு இணையான சீனாவின் கன்பூசியஸ் அமைதி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருது 20 பேர் கொண்ட தேர்வு குழுவில் பெரும்பான்மை ஆதரவோடு பிடல்காஸ்ட்ரோ பெயர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
2010ம் ஆண்டு முதல் சீனாவில் கான்பூசியஸ் அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது. நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் இந்த விருதை .நாவின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அனான், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்புடின் உள்ளிட்டோர் பெற்றிருக்கின்றனர். இந்தாண்டிற்கான (2014) கன்பூசியஸ் அமைதி விருதிற்கு 20 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதில் தென்கொரியா ஜனாதிபதி பார்க் ஜென் ஹாய், .நா பொதுச்செயலாளர் பான்- கீ- மூன், ஹாங்காய் கூட்டுறவு அமைப்பு, சைனீஸ் ரிலிஜியன் தாய்ஸ்ம் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இவர்களிலிருந்து ஒருவரின் பெயரை தேர்ந்தெடுக்க கன்பூசியஸ் அமைதி விருது தேர்வு குழு தேர்ந்தெடுக்க வேண்டும்.
மொத்தம் 12 பேர் கொண்ட தேர்வு குழுவில் பிடல்காஸ்ட்ரோவின் பெயரை 9 பேர் முன்மொழிந்தனர். இந்த பெரும்பான்மையின் அடிப்படையில் பிடல்காஸ்ட்ரோவுக்கு கன்பூசியஸ் அமைதி விருது வழங்குவது என முடிவு செய்யப்பட்டது என்று இந்த விருதுக்கான தேர்வுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் லியூ தெரிவித்தார். பிடல் காஸ்ட்ரோ வயது மூப்பின் காரணமாக 2008ம் ஆண்டு கியூப ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் உடல் நிலையின் காரணமாக வெளியில் அதிகமாக பயணிப்பதில்லை. இந்நிலையில் அவர் நேரடியாக இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்று விருதை பெற முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில் விருது வழங்கும் விழாவில் கியூபாவை சேர்ந்த மாணவர் ஒருவரிடம் பிடல் காஸ்ட்ரோவுக்கான விருது வழங்கப்படும். இந்த விருது 15 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புடையது. இதனை அந்த மாணவர் பிடல் காஸ்ட்ரோவிடம் முறையாக கொண்டு சேர்ப்பார் என்று விருதிற்கான ஒருங்கிணைப்பாளர் லியூ தெரிவித்திருக்கிறார்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

பிடல் காஸ்ட்ரோ விருதிற்கு முற்றிலும் தகுதியானவர்தான்
வாழ்த்துவோம்