Thursday, 29 January 2015

தாய் மதத்திற்கு திரும்புகின்றவர்களை எந்த சாதியில் சேர்ப்பீர்கள்?- கருத்தரங்கில் பேராசிரியர் அருணன் கேள்வி

தமுஎகச மதுரை மாநகர் மாவட்ட 7 வது மாநாட்டினையொட்டி சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத் தரங்கில் கலந்து கொண்டுபேரா.அருணன் பேசியதாவது: தூய்மை இந்தியா பற்றி பேசும் நரேந்திரமோடி, துப்புரவு பணியாளர்கள் குறித்து பேசுவதேயில்லை. 21 ஆம் நூற்றாண்டாகியும் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஏன் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள் என்று மோடி என்றாவது நினைத்ததுண்டா?இந்து மதத்தை விட்டுச் சென்றவர்கள், மீண்டும் தாய் மதம் திரும்புங்கள் என்கிறார்கள். ஏன் அவர்கள் இந்து மதத்தை விட்டுப் போனார்கள்? 99 சதவீதம் சூத்திரர்களும், பஞ்சமர்களும்தான் மதம் மாறினார்கள்.
சாதிய அடக்குமுறையைக் கண்டு விம்மிதான் அவர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்கள். ஆக்ராவில் 150 இஸ்லாமியர்களை தாய் மதத்தில் சேர்த்தீர்களே அவர்களை, எந்த சாதியில் இப்போது சேர்த்துக் கொண்டீர்கள்? தாய் மதம் திரும்புபவர்கள், எந்த சாதியில் சேர விருப்பமோ,அந்த சாதியில் சேர்ந்து கொள்ளலாம் என நீங்கள் அறிவிக்கத் தயாரா?அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண் டும் என, உரிய பயிற்சி பெற்ற 250 பேர்களுக்கும் மேல் இன்றுவரை வேலையில்லை. எல்லா பயிற்சிகளுக்கும் பெற்ற தாழ்த்தப்பட்ட ஒருவரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ளும், சிதம்பரம் நடராசர் கோவிலுக்குள்ளும் அனுப்பத் தயாரா? இந்து பெண்களை எந்த இந்துக்கோயிலிலாவது அர்ச்சகராக்கும் பேச்சு உண்டா? திருக்குறள் பற்றியும், திருவள்ளுவரைப் பற்றியும் ஆர்எஸ்எஸ், பாஜக அதிகமாக பேசி வருகிறது. பாஜக எம்.பி தருண் விஜய், திருக்குறள் பயணம் என்று ஒன்றைநடத்தியுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து, தருண் விஜய்க்கு பாராட்டு விழா நடத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இந்தியாவின் தேசிய நூலாக பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் வைரமுத்து கேட்டாரா? பாஜகவினர் தமிழைக் கூறி ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று வைரமுத்து மிகவும் மதிக்கும் கலைஞர் கருணாநிதி கூறியுள்ள நிலையில், தருண் விஜய்க்கு பாராட்டு விழா நடத்துவது சரிதான் என வைரமுத்து அறிக்கை விடுவது சரியல்ல.அனைத்து மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதம் என்பது தான் ஆர்எஸ்எஸ்சின் மொழிக்கொள்கை. இதற்காக, தமிழை ஒழித்துக் கட்ட சமஸ்கிருதம், பகவத் கீதையைத் தூக்கிக் கொண்டு பாஜக அலைகிறது. சமஸ்கிருதத் திணிப்புக்குப் பின் சாதியம், ஆணாதிக்கச் சிந்தனை உள்ளது. சூத்திரனும், பெண்ணும் படிக்கக் கூடாது என்று கூறும் பகவத்கீதை, சூத்திரர்கள் பாவயோனியில் இருந்து பிறந்தவர்கள் என்றும் கூறுகிறது. இந்த நூலைத்தான் தேசிய நூலாக ஆக்க வேண்டுமென பாஜக கூறுகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுத்து மீதான அடக்குமுறையை ஏற்க முடியாது. இதை எதிர்த்து தமுஎகச தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. சட்டத்தைத் தவிர யாரும் இவ்விஷயத்தில் தலையிடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பெருமாள் முருகனுக்கு தமுஎகச வழங்கிய முதல் வெற்றிக்கனி. எழுத்துரி மையைக் காப்பதற்காக எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சூப்பர் தணிக்கைச் சட்டத்திற்கு எதிராக உண்ணாவிரதம் நடத்திக் காட்டியஒரு அமைப்பும் தமுஎகசதான் என பேரா.அருணன் கூறினார்..

No comments: