Saturday 27 August 2016

செப்.2:தொழிலாளர்உரிமைப்போர் . . .

நாட்டிலுள்ள உழைக்கும் வர்க்கம் வரும் செப்டம்பர் 2 அன்று பொது வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தயாரிப்புப்பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது. இது, 1991ல் தாராளமயக் கொள்கைகளை ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கத் துவங்கியபின் நடைபெறும் 17ஆவது பொது வேலைநிறுத்தமாகும். தாராளமயத்தை அமல்ப டுத்தத்  துவங்கிய கடந்த 25 ஆண்டுகளில், இந்த 17 வேலைநிறுத்தங்களும் தொழிலாளி வர்க்கத்தால் நவீன தாராளமயத் தாக்குதலுக்கு எதிராக மேற்கொ ள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான எதிர்ப்பு நடவடிக்கைகளாகும். உழைக்கும் மக்களைக் கடுமையாகப் பாதிக்கக் கூடிய அனைத்து முக்கியப் பிரச்சனைகளையும் உள்ளடக்கி ஒரு 12 அம்சக் கோரிக்கைச் சாசனம் உருவாக்கப்பட்டு அதன்கீழ் இவ்வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது.இவற்றில் விலைவாசியைக் கட்டுப்படுத்து, பொது வினியோக முறையை வலுப்படுத்து, தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றாதே, தனியார்மயத்தை நிறுத்து, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே, ஒப்பந்த வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடு, மாதத்திற்கு 18 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதியம்வழங்கிடு, அணிதிரட்டப்படாத முறைசாராஊழியர் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் 3 ஆயிரம் ரூபாய் உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கிடு உள்ளிட்ட கோரிக்கைகளும் அடங்கும்.
ஒருமுறை கூட பேசாத அரசு
சரியாக ஓராண்டுக்கு முன்பு 2015ல் இதே செப்டம்பர் 2 அன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேட்சையான மத்திய, மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் இணைந்து ஒரு வேலை நிறுத்தத்தை நடத்தின. ஆனால், மோடி அரசாங்கம்,தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கை எதையும் நிறைவேற்றத் தவறிவிட்டது. அப்போது வேலைநிறுத்தத்திற்கு முன்பு, தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரகக் குழு அதன்பின்னர் இந்த சங்கங்களுடன் ஒரு முறை கூட பேச்சுவார்த்தை நடத்திடவில்லை. மாறாக, மோடி அரசாங்கம், தன்னுடைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதுமட்டுமல்ல, சில முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கும் முன்மொழிவுகளை மோடி அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களைத் தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றுவதற்கான வரைவுகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே சில பாஜக மாநில அரசாங்கங்கள், தொழிலாளர்களின் உரிமைகளைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய விதத்தில், மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன.
வெற்றுத் தம்பட்டத்தால் பலன் இல்லை
தொடர்ந்து விஷம்போல் ஏறிவரும் விலைவாசி உயர்வும், உணவுப் பணவீக்கமும் உண்மையான ஊதியங்களை அரித்துக் கொண்டிருக்கின்றன. உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 11.82 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இதே மாதத்தில் நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண்ணும் 6.07 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இது கடந்த 23 மாதங்களில் அதிகபட்ச உயர்வாகும். ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்என்று இவர்கள் அடித்த தம்பட்டத்தின் மூலம் புதிய வேலைகள் எதையும் எந்தவிதமான தொழிற்சாலைகளிலும் இவர்களால் உருவாக்க முடியவில்லை.வேலைநிறுத்தத்திற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தொழிலாளர்களின் கோபம் உக்கிரமடைந்திருப்பதையும், தங்கள் உரிமைகளுக்காக ஒன்றுபட்டுப் போராட அவர்கள் உறுதியுடன் இருப்பதையும் பார்க்க முடிகிறது. இவ்வாறு தொழிலாளர்களின் மத்தியில் உருக்குபோன்று ஒற்றுமை வளர்ந்து வரும் பின்னணியில், ஆர்எஸ்எஸ்-இன் கட்டளைக்கிணங்க பாரதீய மஸ்தூர் சங்கம் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளாது என்று அறிவித்துள்ள போதிலும், அதன்கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களும் ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை அதனால் தடுத்திட முடியாது.மக்களை மதத்தின் அடிப்படையில் பிரித்திட மதவெறி சக்திகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு தொழிலாளர்களின் ஒன்றுபட்ட வேலைநிறுத்தம் மரண அடி கொடுப்பது போல அமைந்திடும். நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இதர பகுதி உழைப்பாளி மக்களிடமிருந்தும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர் அமைப்புகளின் தொழிலாளர்கள் ஆதரவினைப் பெற்றிருக்கிறார்கள். வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் ஆதரவினைப் பிரகடனம் செய்திருக்கின்றன.
தங்கள் தார்மீக மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ள இருக்கின்றனர். கல்வி நிறுவனங்களில் அன்றைய தினம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மாணவர் அமைப்புகளும் அறைகூவல் விடுத்திருக்கின்றன .செப்டம்பர் 2, உழைக்கும் மக்களின் பெரும் திரளான போராட்டத்தை முன்னறிவிக்கும் விதத்திலும், உரிமைகளை உறுதிப்படுத்தும் விதத்திலும், மாற்றுக் கொள்கைகளைக் கோரும் விதத்திலும் மாறும்.

No comments: