Monday 28 July 2014

முதல் உலகப்போரின் 100ஆண்டு- 28 ஜூலை 1914 - 11 நவ 1918 ...

முதல் உலகப்போர் 28 ஜூலை 1914 முதல் 11 நவம்பர் 1918 வரை நடந்தது. ஐரோப்பாவை மையமாகக் கொண்டு நடந்த இந்தப் போர் இரண்டாம் உலகப்போர் நடக்கும் வரை உலக யுத்தம் என்றும் பெரும் போர் என்றும் அழைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் தொடங்கப்பட்ட பின்னரே இது முதலாம் உலகப்போர் என்று அழைக்கப்பட்டது.1917ம் ஆண்டில் அமெரிக்கா போரில் குதிக்கும் வரை அமெரிக்கர்கள் இந்த போரை ஐரோப்பிய யுத்தம் என்றே அழைத்தார்கள். முதல் உலகப்போரில் சுமார் 90 லட்சம் போர் வீரர்கள் மாண்டார்கள் என்று கணக்கு கூறப்படுகிறது.வளர்ந்து வரும் தொழில்நுட்பமும், தொழில் வளர்ச்சியும் இந்த அதீதமான எண்ணிக்கைக்கு காரணமாகும். வரலாற்றில் நடந்த மோசமான யுத்தங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த யுத்தம் முடிந்தவுடன் பல அரசியல் மாற்றங்கள் நடந்ததில் ரஷ்ய புரட்சியும், ஆஸ்திரியா - ஹங்கேரி ராஜ்யம் அழிந்ததும் முக்கியமானவைகளாகும். அன்றைய உலகின் பொருளாதார வல்லரசுகள் யாவும் இதில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது. உலகச்சந்தையைப் பங்கிட்டுக் கொள்வதுதான் இந்த போரின் உள்நோக்கமாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த போரில் சுமார் 6 கோடி ஐரோப்பியர்களுக்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்து சுமார் ஒரு கோடிக்கு மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.ஏகாதிபத்தியத்தின் மறுஎழுச்சியின் அடையாளம் என்று இந்த யுத்தம் கூறப்பட்ட போதும், இந்த யுத்தம் தோன்றுவதற்கு காரணமாக ஆஸ்திரிய - ஹங்கேரி அரசின் இளவரசர் ஆர்ச்டியூக் பிரான்ஸ் பெர்டினாண்ட் 28.6.1914 அன்று சரஜெவோ நகரில் யுகோஸ்லேவிய தேசிய வாதி காவ்ரிலொ பிரின்ஸிப் என்பவரால் கொல்லப்பட்டார்செர்பியாவுக்கு இளவரசர் கொலையில் பங்கு உண்டு என்று உறுதியாக நம்பிய ஆஸ்திரிய-ஹங்கேரி அரசு செர்பிய அரசுக்கு பத்து நிபந்தனைகளை விதித்தது. இந்த நிபந்தனைகள் செர்பியாவை போருக்கு தூண்டிவிடும் வண்ணம் இருந்தன. இருப்பினும் இவற்றில் எட்டை செர்பியா ஏற்றுக்கொண்டது.28 ஜூலை 1914 அன்று ஆஸ்திரியா - ஹங்கேரி அரசு செர்பியா மீது போர்ப்பிரகடனம் அறிவித்தது.ஐரோப்பிய வல்லரசுகள் இரு அணியாக பிரிந்தன. செர்பியா மீது ஆஸ்திரிய - ஹங்கேரி முதல் படையெடுப்பை நடத்தியது. ரஷ்யா தனது நட்பு நாடான செர்பியாவைப் பாதுகாக்க படைகளைத் திரட்டியது. ஜெர்மனி நடுநிலை வகித்த பெல்ஜியம், லக்சம்பர்க் நாடுகள் மீது படையெடுத்தது.
இரண்டையும் கைப்பற்றிய பின் அது பிரான்ஸ் நோக்கி நகர்ந்தது. இதையடுத்து பிரிட்டன் ஜெர்மனி மீது போர் அறிவிப்பு செய்தது. பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யப்பேரரசு ஆகியவை நேச நாடுகள் தரப்பிலும், ஜெர்மனி, ஆஸ்திரியா - ஹங்கேரி ஆகியவை மத்திய சக்திகள் தரப்பிலும் அணி திரண்டன. இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகியவை பின்னர் நேச நாடுகளுடன் இணைந்து கொண்டன. பல்கேரியாவும், துருக்கியின் ஓட்டோமான் பேரரசும் ஜெர்மனி பின்னால் அணி திரண்டன. மார்ச் 1917ல் ரஷ்யப்பேரரசு கவிழ்ந்த பின் போருக்கு ஒரு தீர்வு கிடைத்தது. நவம்பர் புரட்சிக்குப் பின் போர் ஒரு திருப்புமுனையை அடைந்தது. டிசம்பரில் மத்திய சக்திகள் ரஷ்யாவுடன் ஒரு போர் நிறுத்தத்தை செய்து கொண்டன. 1918ல் ஜெர்மனி நடத்திய தாக்குதலை நேசப்படைகள் முறியடித்து ஓடஓட விரட்டின.
ஒரு லட்சத்து 40 ஆயிரம் இந்திய துருப்புகளும், மத்திய கிழக்கில் சுமார் 7லட்சம் இந்திய துருப்புகளும் இருந்தன. 47,746 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். 65,126 பேர் காயம் அடைந்தனர். ஆனால் வழக்கம் போல் ஏகாதிபத்திய, காலனியாதிக்க பிரிட்டிஷ் அரசு இந்தியர்களின் ஹோம்ரூல் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இதன் பலனாக இந்தியாவில் சுதந்திர வேட்கை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது

No comments: