Thursday 28 August 2014

மத்திய அரசு அலுவலகங்களில் திரிணாமுல்- தாக்குதல்...

மேற்குவங்கத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் புகுந்து தாக்குதல் நடத்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதனன்று (ஆக. 27) சென்னையில் மத்திய அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.துரைப் பாண்டியன் பேசியது மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொழிற்சங்கங்களின் ஜனநாயக உரிமைகள் மீது கடும் தாக்குதலை தொடுத்து வருகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் தொழிற்சங்க கூட்டங்கள் நடக்கும் போது ரவுடிகளை ஏவி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.கொல்கத்தாவில் உள்ள வருமான வரி அலுவலகம், ஜிஎஸ்ஐ தலைமை அலுவலகம் ஆகியவற்றில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.கடந்த பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களில் தலையிட்டு சட்டம்ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முயற்சித்தனர்.தபால் அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி திரிணாமுல் காங்கிரசார், பாரக்பூர் தபால் அலுவலக சப்போஸ்ட் மாஸ்டருக்கு செருப்பு மாலை அணிவித்து அடித்து உதைத்திருக்கிறார்கள். ஜிடிஎஸ் ஊழியர்கள் வீடுகளை காலி செய்யும் அளவிற்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர்இதுபோன்ற தாக்குதல் குறித்து புகார்கொடுத்தால், காவல்நிலையத்தில் வழக்கு பதிவதில்லை.மாறாக, புகார் கொடுக்கிறவர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதனை காரணம் காட்டி தபால்துறை நிர்வாகம் ஊழியர்கள் மீது குற்றப்பத்திரிகை வழங்குகிறது.இப்பிரச்சனையில் மத்தியஅரசும், பிரதமரும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என இவ்வாறு அவர் கூறினார்.இப்போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் ஜெ.ராமமூர்த்தி, பொருளாளர் எஸ்.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments: