Sunday 3 August 2014

JULY-31, தீரன் சின்னமலை 209 -வது நினைவு தினம் . . .

தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள், போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். ‘தீர்த்தகிரி கவுண்டர்என்றும், ‘தீர்த்தகிரி சர்க்கரைஎன்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை அவர்கள், வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். பல்வேறு போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்து, துணிச்சலான போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத் தந்து, இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று, ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டு, அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்த அவர் மூன்று முறை வெற்றியும் கண்டார். கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக விளங்கி, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் ஆங்கிலேயர்களைத் எதிர்த்த போர்கள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
தீரன் சின்னமலை பெயர் காரணம்
தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர்தீரன் சின்னமலைஎன்று அழைக்கப்பட்டார்.
இறப்பு  
ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்தனர். கைது செய்து அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்.
நினைவஞ்சலி
  • தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது.
  • ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது.
  • ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத்தீரன் சின்னமலை மாளிகைஎன்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • ஜூலை மாதம் 31 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டில், இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை, ‘தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலைவெளியிட்டது.

காலவரிசை
  1. 1756: ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார்.
  2. 1782: டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் ஹைதர் அலி மரணமடைந்ததால், அவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
  3. 1799: நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.
  4. 1799: தனது படைகளைப் பெருக்கினார்.
  5. 1800: ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார்.
  6. 1801: பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்து வெற்றிக் கண்டார்.
  7. 1802: சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கினார்.
  8. 1803: அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார்.
  9. 1805: ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற அவரையும், அவரது தம்பிகளையும், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர்.

No comments: