Tuesday 19 August 2014

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை . . .

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள உத்தப்புரத்தில் வசித்து வரும் தலித் மக்கள் வசிப்பிடங்கள் மீது கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தலித் வீடுகளில் இருந்த ஆடு, மாடு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் அடித்து நொறுக் கப்பட்டன. இந்நிலையில், உத்தப்புரத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்த்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, முன்னாள் மாவட்டநீதிபதி எஸ்.திருப்பதி தலைமையில் உருவாக்கப்பட்ட இருநபர் குழுவைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.இக்குழுவின் பரிந்துரைகளின்படி பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவித்து வழங்கிட உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, 20.3.2012 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, உத்தப்புரத்தில் நடைபெற்ற தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியதோடு, இருநபர் விசாரணைக்குழு பரிந்துரையின் அடிப்படையில் நிவாரணங்களை முழுமையாக வழங்கிடுமாறும் உத்தரவிட்டார். மேலும், நிவாரணத்தினை தீர்ப்பு வழங்கிய 12 வார காலத்திற்குள் வழங்கிடுமாறும், எஸ்.சி,எஸ்.டி சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்டோருக்கு முழுமையான நிவாரணங்களை வழங்கிடுமாறும் உத்தரவிடப்பட்டது.உயர்நீதிமன்ற உத்தரவை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தப்புரம் கிராமதலித் மக்கள் திங்களன்று மதுரை மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்க மாநிலச்செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச்செயலாளர் முத்துராணி, மாவட்டத்தலைவர் பிரேமா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் மாவட்டச்செயலாளர் .செல்லக்கண்ணு, மாநிலக்குழு உறுப்பினர் சங்கரலிங்கம் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கச் சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.மாதர் சங்க மாநிலச்செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் கூறுகையில், உத்தப்புரத்தில் தலித் மக்கள் காவல்துறையால் தாக்கப்பட்ட வழக்கில் நீதிபதி சந்துரு தீர்ப்பளித்து ஒன்றரை வருடங்களாகிறது. ஆனால், இதுவரைநிவாரணம் அளிக்கப்படவில்லை.191 பேருக்கு வன்கொடுமை வழக்கின் அடிப்படையில் நிவாரணங்களை வழங்க வேண்டும் என்ற உத்தரவை இதுவரைதமிழக அரசோ, மாவட்டநிர்வாகமோ அமல்படுத்தவில்லை. ஏற்கனவே, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை யென்பதால் இப்போராட்டம் நடத்தப்படுகிறது என்று கூறினார்.அதன் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியிடம் அழைத்துச் சென்றனர். உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கப்படுவது குறித்துஉத்தப்புரம் கிராம தலித்மக்கள் கடும் கொந்தளிப்பில் இருப்பதை தலைவர்கள்,ஆட்சியர் இல.சுப்பிரமணியிடம் எடுத்துரைத்தனர். உடனடியாக, தமிழக அரசின்கவனத்திற்கு இப்பிரச்சனையைக் கொண்டு செல்வதாகமாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். பாதிக்கப்பட்ட 186 உத்தப்புரம் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தனித்தனியாக கோரிக்கை மனுவை வழங்கினர்.

No comments: