Tuesday 10 March 2015

இன்சூரன்ஸ்- சீரழிக்காதே! 1.5 லட்சம் ஊழியர் வேலைநிறுத்தம்..

மார்ச் 9-காப்பீட்டுத்துறையில் 49 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விதத்தில் இன்சூரன்ஸ் சட்டங்கள் (திருத்த) மசோதாவை சட்டவிரோதமான முறையிலும் நாடாளுமன்ற விதிகளுக்கு புறம்பாகவும் நரேந்திர மோடிதலைமையிலான பாஜக அரசு மக்களவையில் நிறைவேற்றிய தைக் கண்டித்தும், இந்த மசோதாவை முற்றாக கைவிட வலியுறுத்தியும் நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் திங்களன்று மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக(எல்ஐசி)த்தின் 8 மண்டலங்களில் உள்ள 103 கோட்டங்கள்; அவற்றுக்கு உட்பட்ட 2000 கிளைகள் மற்றும் ஆயிரக்கணக்கான துணைக் கிளைகளில் பணியாற்றும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும், பொது இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்துபொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்களும் ஒட்டுமொத்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.நாடு தழுவிய இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (AIIEA), LIC ஊழியர் சம்மேளனம், BMS, INTUC உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்றன.
வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டி நாடு முழுவதும் இன்சூரன்ஸ் அலுவலகங்கள் முற்றாக செயலிழந்தன. கேரளத்தில் கோட்ட அலுவலகங்கள், கிளை அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் திறக்கப்படவே இல்லை. ஹைதராபாத்தில் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் வாயிற் கூட்ட ஆர்ப்பாட்டத்தில் AIIEA பொதுச் செயலாளர் ரமேஷ் உரையாற்றினார். பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் அமானுல்லா கான் உரையாற்றினார்.
தமிழகம்
தமிழகத்தில் அனைத்து கோட்டங்களிலும் எழுச்சிமிகு வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெற்றது. ஒட்டுமொத்த இன்சூரன்ஸ் அலுவலகங்களும் முடங்கின. சென்னையில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் எல்.பழனியப்பன் தலைமையேற்றார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் .சுவாமிநாதன், இந்தியவங்கி ஊழியர் சம்மேளனத் தின் (BFIBFI) பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், எஸ்.ரமேஷ்குமார், ஜெயராமன் ஆகியோர் உரையாற்றினர்.சென்னை அண்ணாநகர் கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் கே.மனோகரன், ஆர்.தனசெல்வம், செந்தில்குமார் ஆகியோர் தலைமையேற்றனர்.
திருநெல்வேலியில் உண்ணாவிரதம்
தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் கோட்டச்சங்கங்கள் சார்பில் திருநெல்வேலி, மதுரை,கோவை, சேலம், தஞ்சாவூர், வேலூர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் முழுமையாக வேலைநிறுத்தம் நடைபெற்றது. குறிப்பாக திருநெல்வேலி கோட்ட அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான இன்சூரன்ஸ் ஊழியர்கள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். சிஐடியுமாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான், கோட்ட சங்கத் தலைவர்கள் ஆர்.மதுபால், கே.முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
கோவையில் அகில இந்தியஇணைச் செயலாளர் எம்.கிரிஜா, கோட்டத் தலைவர்கள் எம்.கஜேந்திரன், வி.சுரேஷ்; மதுரையில் கோட்டத் தலைவர்கள் ஜி.மீனாட்சி சுந்தரம், என்.சுரேஷ்குமார்; தஞ்சாவூரில் கோட்டத் தலைவர்கள் ஆர்.புண்ணியமூர்த்தி, எஸ்.செல்வராஜ்; சேலத்தில் கோட்டத்தலைவர்கள் ஆர்.தர்மலிங்கம், .கலியபெருமாள் உள்பட சங்க நிர்வாகிகளின் தலைமையில் வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெற்றது.
பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள்
சென்னையில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தலைமைஅலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சங்க தலைவர் ஜி.கண்ணன் உரையாற்றினார். பொது இன்சூரன்ஸ் துறையில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் பிஎம்எஸ் மற்றும் எஸ்சி/எஸ்டி நலச்சங்கங்களும் பங்கேற்றன. எஸ்சி/எஸ்டி சங்கங்களின் தலைவர்கள் ஜெயமூர்த்தி, அசோகன் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர். இவ்விபரங்களை தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவித்தது.
முகவர்கள் வேலைநிறுத்தம்
இன்சூரன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் லிகாய் அமைப்பின் தலைமையில் லட்சக்கணக்கான முகவர்களும் பங்கேற்றனர். திங்களன்று அவர்கள் புது வணிகம் எதுவும் வராமல், மத்திய அரசுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இத்தகவலை லிகாய் அமைப்பின் மாநிலச் செயலாளர் சோ.சுத்தானந்தம் தெரிவித்தார்.
மதுரையில் உள்ள அனைத்து இன்சூரன்ஸ் அலுவலகங்களும் மூடிக்கிடந்தன , அனைத்து ஊழியர்களும், முகவர்களும் 100 சத வேலை  நிறுத்தத்தில்  ஈடுபட்டனர் , மதுரை இன்சூரன்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திலும், மாலையில் CITU நடத்திய ஆதரவு தார்னாவிலும் நமது பங்களிப்பை தந்துள்ளோம். திண்டுக்கல்லில் நமது சங்கம் சார்பாக ஆதரவு ஆர்ப்பாட்டம் நாடத்தியுள்ளனர்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

போராட்டம் வெல்லட்டும்