Monday 9 March 2015

தமுஎகச கடும் கண்டனம் . . .

தொடரும் காவிக்கும்பலின் தாக்குதல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை
தமிழகத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட காவிக்கும்பல் தொடர்ந்து கருத்துரிமைக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்கும் இவற்றைக் கைகட்டி, வேடிக்கை பார்ப்பதாகக் காவல்துறை மாறியிருப்பதற்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் தலைவர் . தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:பண்பாட்டுத் தளத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கிவரும் தமுஎகசகலை இலக்கிய இரவுஎன்ற வடிவத்தில் பல ஆண்டுகளாக மக்களிடம் முற்போக்குக் கருத்துக்களை கொண்டுசெல்லும் பணியைச் செய்து வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சனிக்கிழமை (மார்ச் 7) இரவு நடைபெற்ற கலை இலக்கிய இரவு நிகழ்ச்சியில் இந்து முன்னணி உள்ளிட்ட காவிக் கும்பல் புகுந்து ரகளை செய்துள்ளது. தோழர் தேனி வசந்தனைப் பேசக்கூடாது என மிரட்டியுள்ளது.
உரிய அனுமதி பெற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அத்துமீறி நுழைந்து கலாட்டா செய்தவர்களை அப்புறப்படுத்தியிருக்க வேண்டிய காவல்துறை கைகட்டி நின்று வேடிக்கை பார்த்துள்ளது. தமுஎகச நிர்வாகிகளும் பொதுமக்களும் காவல்துறை உயரதிகாரியிடம் வலியுறுத்திய பின்னரே அந்தக் கும்பல் அப்புறப்படுத்தப்பட்டது. அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்தியுள்ள கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய தாக்குதலையும் மிரட்டலையும் தடுத்து சட்டப்படியான கடமையைச் செய்ய வேண்டிய அரசும் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது கவலையளிக்கிறது. அவர்களின் செயலின்மையே காவிக்கும்பலுக்கு ஊக்கமளிக்கிறது. அரசின், காவல்துறையின் இந்த செயலின்மைக்குத் தமுஎகச கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.தொலைக்காட்சிமீது தாக்குதல்சென்னையில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவன ஒளிப்பதிவாளர் செந்தில் குமணன் மீதும் பெண் நிருபர் ஒருவர் மீதும் ஞாயிறன்று(மார்ச் 8) இந்து முன்னணி உள்ளிட்ட காவிக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தச் சம்பவத்தின்போது விலைமதிப்புள்ள கேமராவை அடித்து நொறுக்கியுள்ளனர். சம்பவத்தை அறிந்து வெளியே வந்த நிருபர் தியாகச் செம்மலும் தாக்கப்பட்டுள்ளார்.
இவ்வளவும் காவல்துறை உயரதிகாரிகள் முன்னிலையிலேயே நடந்துள்ளது. உதவி கோரியபோது தாக்குதல் தொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு இல்லை என்று கூறியுள்ளனர். உயர் அதிகாரிகளே யாரிடமிருந்து உத்தரவை எதிர்பார்க்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. தாக்கியவர்களைக் கைது செய்வதும் நடவடிக்கை எடுப்பதும்தானே காவல்துறையின் கடமை?சர்வதேச மகளிர் தினத்தையொட்டிதாலி பெண்களைச் சிறுமைப்படுத்துகிறதா? பெருமைப்படுத்துகிறதா?’- என்ற விவாத நிகழ்ச்சி ஞாயிறன்று(மார்ச் 8) ஒளிபரப்பாகப் போகிறது என்ற முன்னோட்டத்தைப் பார்த்து காவிக்கும்பல் தொலைபேசி மூலம் விடுத்த மிரட்டலால் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதன் பிறகும் அந்த கும்பல் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதும் அதனைத் தடுத்து நிறுத்தாமல் காவல்துறை வேடிக்கை பார்த்ததும் கடும் கண்டனத்துக்குரியது.உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நாளில் மதவெறிக் கும்பல் இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டு தனது குணத்தை வெளிப்படுத்தியுள்ளது,இந்து முன்னணி உள்ளிட்ட காவிக்கும்பலின் இத்தகைய ஜனநாயக விரோத, கருத்துரிமையைப் பறிக்கிற அராஜகங்களுக்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுக் குரலெழுப்ப வேண்டும் என தமுஎகச அழைப்பு விடுக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: