Thursday 19 March 2015

தலைமுறைகளுக்கு வழிகாட்டி - தோழர், E.M.S-17 வது நினைவுநாள்.( 1909 -1998 ).

இந்தியாவின் மகத்தான வரலாற்றியல் அறிஞரும், புகழ்பெற்ற மார்க்சிய அறிஞருமான .எம்.எஸ்.நம்பூதிரிபாட் 1909 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தெற்கு மலபாரில் உள்ள வள்ளுவநாடு வட்டத்தைச் சேர்ந்த எலம்குளம் கிராமத்தில் பிறந்தார். அவர் பிறந்த நம்பூதிரி குடும்பமானது மிகவும் பழமைத்தன்மை வாய்ந்த குடும்பமாகும். இளம்வயதில் தந்தையைஇழந்த .எம்.எஸ்., அவரது தாயார்தான் வளர்த்தார். தன் மகன் வேதம் படித்து சிறந்த வேத விற்பன்னராக வேண்டும் என்பதுதான் தாயாரின் நோக்கமாக இருந்தது. எனவே அவர் நான்கு வேதங்களையும் பல பண்டிதர்களிட மிருந்து கற்றுக்கொண்டார். 1932 ஆம் ஆண்டில் .எம்.எஸ். உப்புச்சத்தியாகிரகத்தில் பங்கெடுத்து 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார்.முதலில் கோழிக்கோடு சிறையிலும் பின்னர் கண்ணனூர் சிறையிலும் தீவிர காங்கிரஸ் ஊழியர் பி.கிருஷ்ணபிள்ளையுடன் சிறையில் அடைக்கப்பட்டார். அச்சிறையில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் .கே.கோபாலனையும், புரட்சி வீரர் பகத்சிங்கின் சக தோழர்களான கமல்நாத் திவாரி, கிரண் சந்திர தாஸ், ஆச்சார்யா போன்ற புரட்சியாளர்களுடன் காவலில் வைக்கப்பட்டார் .இது அவருக்கு புரட்சிகர உந்துதலை ஏற்படுத்தியது. சிறிதுகாலத்திற்கு பிறகு .எம்.எஸ். வேலூர் மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே ராஜாஜி, சத்தியமூர்த்தி, டி.பிரகாசம் ,பட்டாபி சீத்தாராமையா போன்ற காங்கிரஸ் தலைவர்களுடனும் பி.சீனிவாசராவ் போன்ற காங்கிரஸ் ஊழியர்களுடனும் சிறை வைக்கப்பட்டார்.
1934 ஆம் ஆண்டில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் முன்முயற்சியால் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. இக்கூட்டத்தில் .எம்.எஸ்., பி.கிருஷ்ணபிள்ளை போன்றோர் கலந்துகொண்டனர். இக்கட்சியானது காங்கிரசில் சோசலிஸ்ட்டுகளின் கட்சி என்றும் அது காங்கிரசை சோசலிச பாதையில் அழைத்துச்செல்ல முயற்சிக்கும் என்றும் கூறப்பட்டது. .எம்.எஸ்., பி.கிருஷ்ணபிள்ளை போன்றோர் இக்கட்சியில் சேர்ந்தனர். பின்னர் இக்கட்சியின் நிர்வாகக்குழுவிற்கு .எம்.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்டார்.1938 ஆம் ஆண்டில் .எம்.எஸ்., சென்னை மாகாண சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினரானார். சென்னை அரசாங்கம் உருவாக்கிய மலபார் குத்தகைதாரர் விசாரணைக்குழுவில் அவரும் ஒரு உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார்.1939 ஆம் ஆண்டில் இரண்டாவது உலக யுத்தம் துவங்கிய பின்னர் .எம்.எஸ்., உள்ளிட்ட தலைவர்கள் தலைமறைவாகச் சென்றனர். எனவே அவரை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு தருவதாக அரசாங்கம் அறிவித்தும், அவர் பிடிபடவில்லை. தலைமறைவாக இருந்து கட்சி அமைப்பை வளர்த்தார். 1942 ஆம் ஆண்டு ஜூலையில் கட்சி மீதிருந்த தடை நீங்கியவுடன் .எம்.எஸ்., வெளியே வந்தார். வந்தவுடன் தன்னுடைய சொத்துக்கள் முழுவதையும் விற்று அதில் கிடைத்த பணம் 75 ஆயிரம் ரூபாயை கட்சி தொடங்கவிருந்ததேசாபிமானிஇதழுக்காக அளித்துவிட்டார்.
இதனைக்கொண்டு தேசாபிமானி துவங்கப்பட்டது. அந்தத் தொகையானது இன்றைய கணக்கில் பார்த்தால் பல கோடி ரூபாய்க்கு சமமாகும். 1943 ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் அவர் கட்சியின் மத்தியக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.சி.ஜோஷி கட்சியின் பொதுச்செயலாளரானார். 1947 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்னைமாகாண அரசாங்கம் பொதுப் பாதுகாப்பு அவசரச்சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை பிறப்பித்தது. .எம்.எஸ்., .கே.கோபாலன், வி.பி.சிந்தன், .பாலசுப்ரமணியம், கே.முத்தையா மற்றும் .மாயாண்டி பாரதி போன்றோருடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். 1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி கேரள சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றது..எம்.எஸ்., மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிலச்சீர்திருத்த மசோதா மற்றும் கல்வி மசோதா போன்ற முற்போக்கான சட்டங்களை இயற்றினார். ஆனால் காங்கிரஸ் கட்சி மற்றும் நாயர் சொசைட்டி போன்றவற்றின் தலைமையில் பிற்போக்கு சக்திகள் அனைத்தும் சேர்ந்து தொடர்ந்து அங்கே கலவரத்தை உண்டாக்கின. இதைத் தொடர்ந்து நேருவின் மத்திய அரசாங்கம் கேரள மாநில அரசாங்கத்தை கலைத்தது. 1964 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. .எம்.எஸ். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967ம் ஆண்டில் நடைபெற்ற நான்காவது பொதுத் தேர்தலில் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி பெரும்பான்மை பெற்றது.இஎம்எஸ் தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்தது.இஎம்எஸ் 1978ம் ஆண்டு ஜலந்தரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9 வது காங்கிரசில் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 14 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். இக்காலகட்டத்தில் இந்திய நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தஸ்தும் செல்வாக்கும் அதிகரித்ததை கண்டது. பல உலக கம்யூனிஸ்ட் கட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சகோதர உறவு கொண்டன. இஎம்எஸ் தலைமையில் கட்சியின் தூதுக் குழுக்கள் சோவியத் நாடு, சீனா, வடகொரியா மற்றும் கியூபா போன்ற நாடுகளுக்குச் சென்று சகோதர உறவைப் பலப்படுத்தின.
1992ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கட்சியின் 14 வது அகில இந்திய மாநாட்டில் அவர் உடல்நிலை காரணமாக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பின் ஏராளமான கட்டுரைகள் , புத்தகங்கள் எழுதினார். அவை ஆங்கிலத்திலும் மலையாள மொழியிலும் வெளிவந்தன. 1998ம் ஆண்டின் துவக்கத்திலிருந்தே அடிக்கடி நோய்வாய்ப்பட்ட இஎம்எஸ் மார்ச் மாதம் 19ம் தேதி அன்று ஒரு கட்டுரையை தன் உதவியாளர் வேணுவிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மாலை 3.45 மணிக்கு உயிர் நீத்தார்.அவருடைய வாழ்வும் பணியும் வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டுவதாகும். எளிமையான வாழ்க்கை, லட்சியத்திற்கு அர்ப்பணிப்பு, தன்னலமறுப்பு, அளப்பரிய தியாகம், எப்போதும் மக்கள் சேவையை நினைப்பது, தத்துவத்தையும் நடை முறையையும் இணைப்பது போன்றவற்றிற்காக அவர் என்றும் நினைக்கப்படுவார். இஎம்எஸ் இருபதாம் நூற்றாண்டு அளித்த மாபெரும் மனிதர்களுள் ஒருவராவார்.

No comments: