Monday 18 November 2013

சவுதியில் அவதிக்கு உள்ளாகி இருக்கும் கூலித் தொழிலாளர்கள்...

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 75 ஆயிரம் பேர் வேலையிழந்து நாடு திரும்ப முடியாமல் சவுதி அரேபியாவில் தவிக்கின்றனர்.
சவுதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகை 2.7 கோடி. அங்கு 90 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதில் 20 லட்சம் பேர் இந்தியர். கேரளம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம்.சவுதி அரேபிய அரசு, உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு, அயல்நாட்டு தொழிலாளர்களை முறைப்படுத்துதல் என்ற சட்டத்தை இயற்றி, அங்கிருப்பவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டது.அந்நாட்டு அரசு அளித்த காலக்கெடு முடிந்துவிட்டதால், தற்போது சரியான ஆவணங்கள் இன்றி சவுதியில் பணிபுரிவோர் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.தெ.தி.இந்துக் கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் பீர்முகம்மது கூறுகையில், 'முகவர்களால் ஏமாற்றி அனுப்பி வைக்கப்பட்டவர்கள்தான் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சில நாளில் மாற்று வேலைக்கு மாறி விடுகின்றனர். முதலில் சேர்ந்த நிறுவனத்திடம் அவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் முடங்கிவிடுகிறது.முறையான ஆவணங்கள் இல்லாத கூலித் தொழிலாளர்கள் இப்போது திரும்ப அனுப்பப்படுகிறார்கள் என்றார்
நாடாளுமன்றத்தில் எழுப்பவேண்டும்
முன்னாள் எம்.பி. பெல்லார்மின் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 75,000 பேர், பெயின்டிங், கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளுக்கு முகவர்களால் சவுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முறையான ஆவணங்கள், அனுமதி இல்லாமல் பலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்த தொழிலாளர்கள் அங்கு பணிபுரியவும் முடியாமல், வீடு திரும்பவும் முடியாமல் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.
இந்த தொழிலாளர்களின் பணிவரன்முறை, சட்டப்பூர்வமான பாதுகாப்பு குறித்து எம்.பி.யாக இருந்தபோது நாடாளுமன்றத்தில் பேசினேன். அதன் மூலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டன. ஆனால் இன்று அந்த பிரச்சினை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.விமானம் அனுப்புமா தமிழக அரசு?சவுதியில் பணிபுரியும் கேரள தொழிலாளர்களை திரும்ப அழைத்து வருவதற்கு கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழக அரசும் தனி விமானம் ஏற்பாடு செய்து கூலித் தொழிலாளர்களை மீட்க வேண்டும்' என்றார்.
ஒட்டகம் மேய்க்க விட்டனர்!
சவுதியில் இருந்து சமீபத்தில் திரும்பிய நாகர்கோவிலை சேர்ந்த ஜயப்பன் கூறுகையில், முகவர் ஒருவர் சவுதி அனுப்பி வைத்தார். அங்கு என்னை அடர்ந்த காட்டுக்குள் ஒட்டகம் மேய்க்க விட்டார்கள். உறவுக்காரர் ஒருத்தர், என்னை மீட்டு ஊருக்கு அனுப்பிவைத்தார் என்றார். தமிழக அரசும், மத்திய அரசும் அங்கு முடங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான அப்பாவி தொழிலாளர்களை மீட்க களம் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

No comments: