Friday 13 June 2014

மானியங்கள் கட்... சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கை . . .


மானியங்களை படிப்படியாக குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும், வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் சமையல் காஸ் சிலிண்டர்கள் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு மானியங்களால் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்தாண்டு அளித்த மத்திய அரசின் மானியங்களுக்கு செலுத்த வேண்டிய பில் பாக்கி மட்டும் ரூ.1 லட்சத்து 15ஆயிரம் கோடிகளாகும். இதை ஈடுகட்ட மானியங்களை குறைக்க மத்தியில் அமைந்துள்ள நரேந்திரமோடி தலைமையிலான புதிய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்தகால அரசின் நிர்வாக சீர்கேடுகள் இப்போது பாரமாகியுள்ளதாக நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ராஜ்யசபாவில் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக மானிய குறைப்பு நடைமுறைக்கு வர உள்ளது.
பெயர் தெரிவிக்க விரும்பாத மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "சில பொருட்கள் மீதான மானியங்களை குறைக்க பிரதமரை வலியுறுத்த உள்ளோம். இதனால் மானியம் பெறும் பொருட்களின் விலை ஏறும்" என்றார். எரிபொருளுக்கு அதிக மானியம் அளிக்கப்படுகிறது. (டெல்லியில்) தற்போது, ஒரு லிட்டர் டீசல் ரூ.57.28க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டாலே, ஆண்டுக்கு ரூ.5ஆயிரம் கோடி மானியம் அரசுக்கு மிச்சமாகும். மானிய விலையில் வீடுகளுக்கு அளிக்கப்படும் சிலிண்டரின் விலையை ரூ.50 உயர்த்தினால், அரசுக்கு ஆண்டுக்கு 3,800 கோடி மிச்சமாகும். யூரியா விலையை டன்னுக்கு ஆயிரம் ரூபாய் உயர்த்தினால், அரசுக்கு 3ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும். இதுபோன்ற 'மிச்ச' கணக்குகளை நிதித்துறை அமைச்சகம் தீட்டி மோடிக்கு அனுப்பி வைத்துள்ளது. வீட்டுக்கு அளிக்கும் மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், டீசல் மீதான விலையை, மாதத்துக்கு 50 பைசா என்ற வீதத்தில் உயர்த்த வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளையும் பிரதமருக்கு நிதித்துறை அமைச்சகம் அனுப்பிவைத்துள்ளது.

No comments: