Sunday 1 March 2015

புரட்சித் தாரகை K.P..ஜானகியம்மாள் நினைவு நாள்(1917-1992).

மறைந்த அருமைத் தலைவர் கே.பி.ஜானகி அம்மாள் அவர்கள் தமிழகம் முழுவதிலும், “அம்மாஎன்று அன்போடு அழைக்கப்பட்டவர், போற்றப்பட்டவர். 1928ம் ஆண்டில் 12வது வயதில் மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பழனியாபிள்ளை பாய்ஸ் கம்பெனியில் சிறுமி ஜானகி குடும்பத்தினரால் சேர்க்கப்பட்டார். அரசியலில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக ஜானகி படிப்படியாக நாடகங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.நாடகத் துறையைவிட்டு விலகும் போது அவருக்கு மதுரை மேலமாசி வீதியில் இரண்டு பெரிய வீடுகள் சொந்தமாக இருந்தன. 1939ம் ஆண்டில் நேதாஜி மதுரை வந்தபோது அதிகாரப்பூர்வ காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு வரவேற்பு தரவில்லை. ஆனால் குருசாமியைத் தலைவராகவும் ஜானகியை செயலாளராகவும் கொண்ட மதுரை நகர் காங்கிரஸ் கட்சி அவருக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்தது.பசும்பொன் தேவரும், ஜானகியும் உடன்வர நேதாஜி மதுரை நகரின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார். நகர் முழுவதும் மக்கள் குழுமி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் யுத்த -எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ததற்காக குருசாமி, ஜானகி இருவருக்கும் 6 மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.குருசாமி கண்ணணூர் மத்திய சிறைக்கும், ஜானகி வேலூரில் உள்ள பெண்கள் மத்திய சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.யுத்த - எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக தென்னிந்தியா விலேயே முதன் முதலாக தண்டிக்கப்பட்ட பெண் அரசியல்வாதி ஜானகி அம்மாள்தான்.ஜானகியம்மாள் 1967 முதல் 1971 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாகச் செயலாற்றினார்.சமுதாயத்தில் சரிபாதியாக வாழ்கின்ற பெண் குலத்தின் விடுதலையில் அக்கறை கொண்ட அம்மா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அமைப்பை உருவாக்குதில் பங்கு கொண்டு 1974ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக ஜனநாயக மாதர் சங்கத்தின் முதல் மாநாட்டில் ஜானகி அம்மா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடைசிக் காலம் வரை மாநிலத் தலைவராகச் செயல்பட்டவர். அவரது பிரதான பணியும், உழைப்பும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் இயக்கத்தில்தான் இருந்தது.60 ஆண்டுகள் பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர்.ஒடுக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களுக்காக உரத்துக்குரல் கொடுத்த அப்பழுக்கற்ற போராளி! எளிமையான வாழ்வுக்கு இலக்கணம் வகுத்தவர்.தேச விடுதலைப் போராட்டத்தில் ஆர்த்தெழுந்த தேச பக்தவீராங்கனை! ‘உடல் மண்ணுக்கு உயிர் நாட்டுக்குஎன்று சூளுரைத்து பல ஆண்டுகள் சிறைக் கொடுமைகளை அனுபவித்த புரட்சித்தாரகை!

No comments: