Monday 8 June 2015

மொட்டை கடுதாசியும் முதல்வர் கடிதமும்!

சென்னை ஐஐடி நிறுவனத்தில் அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தடை விதிக்குமாறு கூற அதைஏற்று ஐஐடி நிர்வாகம் தடைவிதித்து. இந்தத் தடைக்குஎன்ன காரணம் என்றுகேட்டால் இந்த வாசிப்பு வட்டத்தில் மோடி அரசை விமர்சித்து கருத்து கூறப்பட்டதாக மத்தியஅரசுக்கு ஒரு மொட்டைக்கடிதம் வந்ததாகவும் அதன் அடிப்படையில்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, செம்மொழியான சமஸ்கிருத மொழிக்கு தனி வாரம்கடைப்பிடித்து அந்த மொழியை ஊக்குவிப்பது போல செம்மொழியான தமிழ் மொழிக்கும் வாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.ஆனால் அந்த கடிதத்தை மோடி அரசு கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் ஊர் பெயர் குறிப்பிடாத ஒரு மொட்டைக் கடிதத்துக்கு மதிப்பளித்து மோடி அரசு தடை நடவடிக்கை எடுத்துள்ளது. இதைக் கண்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோபம் வரவேண்டாமா? மாநில அரசுகளின் கடிதங்களுக்கு எந்த மதிப்பும் இல்லையா என்று கேள்வி எழுப்ப வேண்டாமா? ஆனால் இதுவரை சென்னை ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் வாசிப்புவட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதுதொடர்பாக தமிழக அரசு எந்த கருத்தையும் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. காணாமல் போன சரஸ்வதிநதியை கண்டுபிடிக்க பலநூறுகோடியை மோடி அரசு ஒதுக்கியுள்ளது.எல்லா உயிர்களையும் படைத்த பிரம்மன்தான் சரஸ்வதியையும் படைத்தானாம். ஆனால் தான் படைத்த சரஸ்வதியைக் கண்டு பிரம்மனுக்கு மோகம் தலைக்கு ஏறிவிட்டதாம். சரஸ்வதியை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று வெறியுடன் சரஸ்வதியை பிரம்மன் துரத்தினானாம். இதற்கு பயந்த சரஸ்வதி நான்கு திசைகளிலும் பதுங்கிப் பதுங்கி ஓடினாராம். சரஸ்வதி எந்த திசையில் ஓடினாலும் அதை சரியாகக் கண்டுபிடித்து பிடிப்பதற்காக நான்கு பக்கமும் பிரம்மன் தலைகளை ஏற்படுத்திக் கொண்டானாம். இதனால்தான் அவனுக்கு நான்முகன் என்று பெயர். நான்கு பக்கமும் ஓடியும் தப்ப முடியாமல் சரஸ்வதி கடைசியில் பூமிக்குள் சென்று ஒளிந்து கொண்டாராம்.அப்படியும் விடாமல் பிரம்மன் சரஸ்வதியைக் கண்டுபிடித்து தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டானாம். இது நாங்கள் கூறும் கதையல்ல. சரஸ்வதி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சரஸ்வதி நதி என்று ஒன்றுஇருந்ததாக அறிவியல்பூர்வ சாட்சியில்லை. புராணங்களில்தான் இருக்கிறது. ஆனால் அதைக்கண்டுபிடிக்க மோடி அரசு பலகோடி ரூபாய் செலவழிக்கிறது.அம்பேத்கர் -பெரியார் சிந்தனைகள் இத்தகைய பிற்போக்கு குப்பைகளுக்கு எதிரானவை. எனவேதான் அந்த மேதைகளின் சிந்தனைகளை அழிக்க பாஜக பரிவாரம் துடிக்கிறது.- சு.வெங்கடேசன்

No comments: