Thursday 24 September 2015

அரசு, தனியார் ஆரம்பப்பள்ளிகளில் தாய்மொழியே பயிற்று மொழி

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தாய்மொழி தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொறடா கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.பேரவையில் புதனன்று (செப். 23) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கே.பாலகிருஷ்ணன் பேசியது வருமாறு:தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து சுமார் 1200 பள்ளிகள் தொடர்ந்து நடத்த முடியுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. மொத்தமுள்ள 37 ஆயிரத்து 141 அரசுப்பள்ளிகளில் 55 லட்சத்து 40 ஆயிரத்து 425 மாணவர்கள் படிக்கின்றனர்.
அதேசமயம் 11 ஆயிரத்து 658 தனியார் பள்ளிகளில் 46 லட்சத்து 55 ஆயிரத்து 270 மாணவர்கள் படிக்கின்றனர். அதாவது அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் குறைவாகவும், தனியார் பள்ளிகளில் அதிகமாகவும் படிக்கின்றனர்.நடப்பாண்டு உயர்நிலை பள்ளி மாணவர் சேர்க்கை விகிதம் அரசுப்பள்ளிகளில் 36.6 விழுக்காடாகவும், தனியார் பள்ளிகளில் 43.75 விழுக்காடாகவும் உள்ளது. மேல்நிலைப் பள்ளியை பொறுத்தவரை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 37 விழுக்காடாகவும், தனியார் பள்ளிகளில் 48 விழுக்காடாகவும் உள்ளது.அரசுப்பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள், கழிப்பிடங்கள் பராமரிக்கப்படாதது, தண்ணீர் வசதி இல்லாதது போன்றவற்றால் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து, தனியார் பள்ளிகளில் அதிகரித்து வருகிறது.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில பயிற்று மொழி வகுப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார். இதன்மூலம் ஆரம்ப பள்ளிகளில் தமிழே இல்லாத நிலை உருவாகும். கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை தாய் மொழி தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் செல்வதை தடுக்கவும், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நிலையை அரசு உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது ..வேலு (திமுக), ஆறுமுகம் (சிபிஐ), அஸ்லாம் பாஷா (மமக) ஆகியோரும் பேசினர்.இவற்றிற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் உள்ளதாலும், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாலும், 14 வகையான நலத்திட்டங்கள் வழங்குவதாலும், மாணவர் இடைநிற்றல் குறைந்து, சேர்க்கை விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்றார்.

No comments: