Thursday 24 December 2015

டிசம்பர் -24, எம்.ஜி.ஆர் நினைவு நாள் . . .

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்து, அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன். 
தான் நடித்த பாடலுக்கேற்ப வாழ்ந்தும் காட்டியவர், எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். இலங்கையின் கண்டிக்கு அருகே இருக்கும் நாவலப்பிட்டியில், 1917-ம் ஆண்டு, ஜனவரி 17-ம் நாள், மருதூர் கோபாலமேனன், சத்தியபாமா தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார் எம்.ஜி.ஆர்.
தந்தையின் பணி காரணமாக கேரளாவிற்கு வந்த இவருடைய குடும்பம், தந்தையின் மறைவுக்குப் பிறகு, கும்பகோணத்தில் குடியேறியது. தன்னுடைய 7-வது வயதில் நாடகக் குழுவில் சேர்ந்து பின்னர் திரைத்துறைக்கு வந்த எம்.ஜி.ஆருக்கு, ராஜகுமாரி திரைப்படம் அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது. அரசிளங்குமரி, மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், அடிமைப்பெண், எங்கள் வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, விவசாயி என பல்வேறு திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர். சமூக சீர்திருத்தக் கருத்துக்களை தன்னுடைய பாடல்கள் மற்றும் திரைப்படங்களில் வலியுறுத்தினார். இதன் மூலம் புரட்சித் தலைவராக ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார். தொடக்கக் காலத்தில் காங்கிரஸில் ஈடுபாடு கொண்டிருந்த எம்.ஜி.ஆர், பின்னாளில், அறிஞர் அண்ணாவின் பால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1967ம் ஆண்டு நடிகர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு உயிர்பிழைத்தபோதிலும், எம்ஜிஆரின் குரல் மாறியது. எனினும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர், 1972-ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். பின்னர், 1977-ல் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் எம்.ஜி.ஆர்.
தான் இறக்கும் வரை தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக இருந்த இவரது ஆட்சியின்போது, சத்துணவுத் திட்டம், இலவச சீருடை, காலணி வழங்கும் திட்டம், இலவச பாடநூல் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து, இலவசங்களுக்கு அடித்தளமிட்டார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் உட்பட 5-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன.
1984-
ல் நோய்வாய்ப்பட்டு, சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக முதலமைச்சரானார் எம்.ஜி.ஆர். தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே, பரப்புரைக்குச் செல்லாமலேயே, முதலமைச்சரான பெருமை இவர் ஒருவருக்கு மட்டுமே உண்டு. இருந்தும், தன்னுடைய முழு பதவிக்காலம் முடிவதற்குள் 1987-ம் ஆண்டு பதவியிலிருக்கும்போதே உயிரிழந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. எம்ஜிஆர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், இன்றும் போற்றப்படும் தலைவர்களில் ஒருவராக அவர் திகழ்ந்து வருகிறார்
.

No comments: