Wednesday 7 October 2015

சாதி என்னும் பெருநோய் ! . . .

கடலூர் மாவட்டம் ஆண்டிப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி என்பவர், தன் பேத்தி ரமணி தேவியை, கழுத்தைஅறுத்துக் கொலை செய்திருக்கிறார். காரணம்? வேறு ஒரு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக.தன் சந்ததி தழைத்து, செழித்து வாழ்வதைப் பார்த்து மகிழ்ந்திருப்பதே மூத்த தலைமுறையின் குணம், பேரன், பேத்திகள் விரும்பும் ஒன்றை, அவர்களின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி பெற்றுத் தருவதுதான் தாத்தா, பாட்டியின் பண்பு. ஆனால், நெகிழ்ச்சி மிகுந்த அந்த உறவும், பாசமும் சாதிவெறியின் முன் செல்லாக்காசாகிவிட்டது. ‘நான் ஊர் நாட்டாமை. ஊருக்கே முன்மாதிரியாக இருக்க வேண்டிய என் குடும்பத்தில் இப்படி நடந்தால், என் கௌரவம் என்னாவது?’ என்கிறார் வீராச்சாமி. குடும்ப கௌரவம் என்பது இங்கு சாதி கௌரவம்தான். சாதியைக் கௌரவமாகக் கருதும் இழிவான மனப்போக்குதான் இத்தகைய இரக்கமற்ற கொலைகளைச் செய்ய வைக்கிறது.கோகுல்ராஜ் தொடங்கி எத்தனையோ உதாரணங்கள் சொல்ல முடியும்.இந்தப் படுபாதகக் கொலைகள் எதற்கும் அழுத்தமான எதிர்க்குரல்கள் எழவில்லை. இந்த மௌனம்தான் பேரச்சம் தருவதாக இருக்கிறது. சாதிக்காக தன் பேத்தியைக் கொலை செய்வதை, தன் மௌனத்தால் இந்தச் சமூகம் அங்கீகரிக்கிறதா என்ன? இந்தக் கொலையின் முதல் குற்றவாளி வேண்டுமானால் வீராச்சாமியாக இருக்கலாம். ஆனால், சாதிவெறியைக் கொண்டாடும் அனைவருமே இதில் குற்றவாளிகள்தான்.ஓர் இளம் பெண் அந்த வயதுக்கு உரிய இயல்புடன் ஓர் இளைஞரைக் காதலித்தது குற்றம் என்றால், மூன்று தலைமுறை கண்ட முதிர்ச்சி அடைந்த மனிதர்கள் சாதியைக் காதலிப்பது மட்டும் நியாயமா? சாதியைக் காதலிக்காத, சாதிவெறியைக் கடைப்பிடிக்காத யாரும் வாழத் தகுதியற்றவர்கள் என்பதுதான் இவர்கள் உணர்த்த விரும்பும் செய்தி. கல்வியினாலும், சமூகத்தின் இயல்பான வளர்ச்சிப் போக்கினாலும், அங்கொன்றும் இங்கொன்றும் உதிரத் தொடங்கும் சாதியப் பூச்சுகளைக் கண்டு இவர்கள் பதறுகின்றனர்.
எனவே, காதலிப்போரைக் கழுத்தறுத்து, ‘காதல் செய்தால் இதுதான் கதிஎன சமூகத்தை அச்சத்தில் ஆழ்த்தி தங்கள் சாதிவெறியை நிலைநாட்டிக் கொள்கின்றனர்.இத்தகைய குற்றங்கள் எங்கோ ஒன்று, எப்போதோ ஒன்று நடப்பதாக இனியும் விட்டுவிட முடியாது. நவீன தகவல் தொடர்பு உலகத்தில் சம்பவம் ஒன்றாக இருப்பினும், அது எல்லோருக்கும் பரவும் வேகமும், எல்லோரிடமும் ஏற்படுத்தும் தாக்கமும் மிக அதிகம். எனவே, இதை ஏதோ ஒரு காவல் நிலையத்தில் பதியப்படும் இன்னொரு குற்ற வழக்காக மட்டுமே கருத முடியாது. இந்தக் கொலைகள், சமூகத்தில் ஆழப் புரையோடிப் போயிருக்கும் நோயின் வெளிப்பாடுகள்.மனித உயிரைவிடப் பெரியதா சாதி? கண்ணுக்குத் தெரியாத வீண் சாதிப் பெருமைக்காக உயிரோடு உலவிய பேத்தியை, அவள் கழுத்தை அறுத்துக்கொல்லும் அளவுக்கு, மனித மனம் குரூரமாக ஆகிவிட்டது என்றால் இதைவிட கொடூரம் எதுவும் இருக்க முடியாது.சாதி ஒரு நோய் என்றால், அதற்கு மருந்து சாதி ஒழிப்புதான். அந்த மருந்தை ஒரே நாளில் அனைவருக்கும் தந்துவிட முடியாது. அது முதலில் அவரவர் மனதில் தொடங்கட்டும்.... தொடரட்டும். அந்த நாள் இன்றாகவே இருக்கட்டும்!- நன்றி : ஆனந்தவிகடன் (7.10.2015)

No comments: