Sunday 18 May 2014

துருக்கி சுரங்க விபத்தில் பலியானோர் 298 ஆக உயர்வு. . .

துருக்கியில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சுரங்கத்திற்குள் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை 300 தாண்டும் என அஞ்சப்படுகிறது.
துருக்கி நாட்டின் சோமா நகர் பகுதியில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் செவ்வாயன்று பெரும் விபத்து ஏற்பட்டது. மின் கசிவின் காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த கோர விபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அத்தொழிலாளர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அவசரகால மீட்புக்குழுவினர் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்தில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை என்பது 298 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதுவரை 485 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அதேநேரம், சுரங்கத்தில் இன்னும் பல தொழிலாளர்கள் சிக்கி கொண்டுள்ளனர். இவர்களை மீட்கும் பணி தற்போது 4 நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 300 தாண்டும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, அரசின் அலட்சிய போக்கே இத்தனை தொழிலாளர்களின் உயிரிழப்பிற்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக சோமா நகரில் வெள்ளியன்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கண்ணீர் புகைக் குண்டு உள்ளிட்டவைகளை கொண்டு அந்நாட்டு போலீசார், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த மோதல் சம்பவத்தில் 2 போலீசார் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இதேபோல் இஸ்தான்புல் மற்றும் இல்மீர் உள்ளிட்ட நகரங்களிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. 

No comments: