Sunday 18 May 2014

வேல்ஸ் + BSNL தொலைத் தொடர்பு மேலாண்மைப் படிப்பு . . ,

சென்னை, பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் கொண்ட தொலைத் தொடர்பு மேலாண்மைப் படிப்பு நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) தொடங்கப்பட உள்ளது.
வேல்ஸ் பல்கலைக்கழகமும் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இணைந்து இந்தப் படிப்பைத் தொடங்க உள்ளன என்று பி.எஸ்.என்.எல். நிதி மேலாண் துறை தலைமைப் பொது மேலாளர் கல்யாண் சாகர் நிப்பாணி கூறினார்.
தொலைத்தொடர்பு மேலாண்மைப் படிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.நடப்புக் கல்வி ஆண்டில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படும் இரண்டு ஆண்டு கால தொலைத் தொடர்பு மேலாண்மைப் படிப்புக்கான பாடத் திட்டம், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சிக்கான உதவி பரிமாற்றம் உள்ளிட்டவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பி.எஸ்.என்.எல். நிதி மேலாண்துறை தலைமைப் பொது மேலாளர் கல்யாண் சாகர் நிப்பாணியும், வேல்ஸ் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.மதியழகனும் கையெழுத்திட்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் கல்யாண் சாகர் நிப்பாணி கூறியது: நாளுக்கு நாள் பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்து வரும் தொலைத் தொடர்புத் துறையில் வரும் 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறும் நிலை உள்ளது.பொதுத் துறையும் தனியார் பல்கலைக்கழகமும் இணைந்து தற்போது மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் மூலம் தொலைத்தொடர்புத் துறைக்கான மேலாண்மைக் கல்வி பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.தொலைத்தொடர்பு பொறியியல் கல்வி பயின்றவர்கள் மட்டுமல்லாமல், கலை, அறிவியல் இளநிலை பட்டதாரிகளும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்க முடியும். தொலைத் தொடர்பு மேலாண்மைக் கல்விக்கான பாடத் திட்டங்களை மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு கல்விகற்பிக்கவும், தொலைத் தொடர்பு மேலாண்மை குறித்த அனுபவ அறிவை நேரடியாகப் பெறும் வகையிலும் மீனம்பாக்கம் ராஜீவ்காந்தி நினைவு பி.எஸ்.என்.எல். பயிற்சி மையத்தில் போதிய பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள 16 பயிற்சி மையங்களில் இது போன்று தொலைத் தொடர்பு மேலாண்மைக் கல்வி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அண்மையில் ஹைதராபாதில் தனியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொலைத் தொடர்பு மேலாண்மைப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பை விரைவில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
வேல்ஸ் பல்கலைக்கழகத் தலைவர் ஐசரி.கே.கணேஷ் பேசும்போது, தொலைத் தொடர்புத் துறையில் பெருகி வரும் வேலைவாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு மேலாண்மைப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றார். பி.எஸ்.என்.எல். துணைப் பொது மேலாளர் டி.எஸ்.கண்ணன், மீனம்பாக்கம் ராஜீவ்காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மைய தலைமைப் பொறியாளர் டி.சுப்புலட்சுமி, வணிக மேலாண்மைத் துறை இயக்குநர் டாக்டர் எஸ்.ரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments: