Tuesday 14 April 2015

குடும்பக் கட்டுப்பாடு செய்தவர்களை தான் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் சாக்சி மகராஜ் வெறிப் பேச்சு...

குடும்ப கட்டுப்பாடு செய்தவர்களை தான் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்என்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாக்சி மகராஜ் எம்.பி.கருத்து தெரிவித்து உள்ளார். சர்ச்சைக்கு பெயர் போனவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாக்சி மகராஜ் (56)எம்.பி. காந்தியை கொலை செய்த நாதும்ராம் கோட்சேயை சிறந்த தேச பக்தர் என்று இவர் சில நாட்களுக்கு முன்பு கூறி நாடு முழுவதும் கடும் கண்டனத்துக்கு உள்ளானார். பின்னர் இதற்காக இவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார். பின்னர் இந்து பெண்கள் குறைந்தது 4 குழந்தைகளையாவது பெற வேண்டும் என்று கூறியதால் எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்கு உள்ளானார்.இப்போது குடும்ப கட்டுப்பாடு செய்தவர்களை தான் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். யுனே நகரில் நடைபெற்ற ஒரு விழாவில் சாக்சி மகராஜ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-மக்கள் தொகை பெருக்கம் இந்தியாவுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மக்கள் தொகை 30 கோடியாக இருந்தது. இப்போது 130 கோடியாக உயர்ந்து உள்ளது. இதற்கு யார் பொறுப்பு? இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் அனைவருக்கும் சட்டம் பொதுவாக இருக்க வேண்டும். இந்துக்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.ஆனால் முஸ்லிம்கள் கட்டுப்பாடு செய்து கொள்வது அவர்கள் விருப்பத்துக்கு விடப்படுகிறது. அவர்கள் 4 மனைவிகள் மூலம் 40 குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?எனவே மத்திய, மாநில அரசுகள், எதிர்க்கட்சியினர் அனைவரும் ஆலோசனை செய்து குடும்ப கட்டுப்பாடு செய்தவர்களை தான் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கண்டிப்பான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
சாத்வி தேவா தாக்கூர்:இதற்கிடையில் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய இந்து மகா சபை தலைவர் சாத்வி தேவா தாக்கூர் தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்துவ மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த அவர்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் அவர்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும். மேலும் இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். மசூதிகள், தேவாலயங்களில் இந்து கடவுள்களின் சிலைகளை வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

No comments: