Saturday 6 September 2014

வெற்றிபெற்றவர்களும்;வெற்றிபெறவேண்டியவர்களும்...

அன்புள்ள தோழர்களே,வணக்கம்.இதுவரையிலும் நான் உங்களோடு நேரடியாகப் பேசியது கிடையாது. ஆனால், என் மூலம் நீங்கள் பேசியிருக்கிறீர்கள்; உங்களிடம் என் வழியாக தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். இப்போது நான் எனக்காக உங்களிடம் பேசுகிறேன். தானியப்பயிர் தான் நன்றாக விளைய வேண்டும் என்று விரும்புவது அத்தானியத்தின் நலன் பற்றியது என்றால் நான் எனக்காகத்தான் பேசுகிறேன். கட்சிக்குள் திருத்தல்வாதம் தலைதூக்கிய போது, அதை எதிர்த்த போராட்டத்தில் நான் ஒரு முக்கிய கருவியாக பிறந்தேன். அப்போது வாரம் ஒருமுறை மட்டுமே உங்களை சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருந்தேன். அதன் பின்னர் தினசரி கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் என் மூலம் தலைவர்கள் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்திலிருந்து மாநிலம் முழுவதும் உள்ள தோழர்களையும், ஆதரவாளர்களையும் சந்திப்பது கடினமென்பதால் தமிழகத்தில் நான்கு மையங்களிலிருந்து உங்களைத் தேடி வருகிறேன்.இந்த 52 ஆண்டு காலத்தில் நான் ஒரு நாள் கூட ஓய்வெடுத்தது கிடையாது. உழைக்கும் மக்களுக்கு எதிராகப் பேசுவதற்கு ஓராயிரம் பேர் இருக்கிறார்கள். உழைக்கும் மக்களுக்காக மட்டுமே நான் பேசிக் கொண்டிருக்கிறேன். என் பிறப்பின் நோக்கமும், இருப்பின் அவசியமும் அதுதான். அது மட்டும்தான்.“எங்கள் பத்திரிகையின் வருமானத்தில் 80 சதவிகிதம் விளம்பரத்தின் மூலம் வருகிறது. எனவே, நாங்கள் பத்திரிகைத் தொழிலில் இல்லை. விளம்பரத்தொழிலில் இருக்கிறோம்என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் முதலாளி வினீத் ஜெயின் குறிப்பிட்டார். இந்த வகையில் அவர் உண்மையைத்தான் பேசுகிறார். விளம்பரம் கொடுப்பவருக்கு விசுவாசமாக அவர் இருப்பதை பகிரங்கப்படுத்திக் கொண்டார். அவ்வளவுதான்.நான் சற்றே பின்னோக்கிப் பார்க்கிறேன். என்னை இயக்குவதற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பல பேர்.
முதலாளித்துவ பத்திரிகைகள் பல ஆசை வார்த்தை கூறிய போதிலும், என் வாழ்வோடு தங்கள் வாழ்வை இணைத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஏராளம். அவர்களெல்லாம் வணிகரீதியான பத்திரிகைகளுக்குச் சென்றிருந்தால் பல பத்தாயிரம் ரூபாய்களை சம்பளமாகப் பெற்றிருப்பார்கள். தங்களுக்கு, தங்கள் குடும்பத்திற்கு ஆயிரம் சிரமங்கள் இருந்த போதிலும், அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு என் இயக்கத்தை உறுதிப்படுத்துவதை ஒரு தவம் போல் செய்து கொண்டிருந்த, செய்து கொண்டிருக்கிற உழைப்பாளி இயக்கத்தின் புதல்வர்கள் பலரையும் பார்த்து நான் பூரிப்படைகிறேன். தமிழகத்தில் பல அரசாங்கங்கள் மாறி மாறி வந்திருக்கின்றன. உழைப்பாளி மக்களோடு உறவு பாராட்டுவதாக தேர்தல் நேரத்தில் சொல்லிக் கொண்டவர்கள் அவர்களின் ஜனநாயகமற்ற போக்கை, தொழிலாளர் விரோதப் போக்கை நான் பேச ஆரம்பித்தால் விளம்பரங்களை உடனடியாக நிறுத்தி விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் எனக்கு கொடுக்கும் பொருளாதார மரண தண்டனையாக கருதிக் கொள்கிறார்கள்.அவர்களுக்குத் தெரியாது என் உயிரின் இருப்பிடம் தொழிலாளி வர்க்கத்தின் இதயங்களும், ரத்த நாளங்களும் என்று. விலை உயர்வுகளும், நுகர்வு கலாச்சாரமும் நவீன தாராளமயமும், உழைக்கும் மக்களை மட்டும் பாதிக்கவில்லை. அவர்களுக்காக பாடுபடுகிற எனக்கும் அந்தக்கதிதான் ஏற்பட்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்து ஜனநாயக மனங்களையும் சென்றடைய வேண்டிய தேவையும், அவசியமும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கை களை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை மக்களிடம் உருவாக்குவதற்காக வணிகப்பத்திரிகைகள் அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டு எழுதுகின்றன. அதன் தூதுவராக விளங்கும் நரேந்திர மோடியை அடிமைச் சமூகத்தின் மன்னனை அந்தக் காலப்புலவர்கள் பாடித்திரிந்ததைப் போல, எழுதிக் குவிக்கிறார்கள். பேராசான் மார்க்ஸ், ‘ஒரு முழுமை பெற்ற மனிதனை நோக்கியே தனது தத்துவப்பயணத்தை மேற்கொண்டார்.
கையும், காலும், உடலும், தலையும், உயிரும் வேறானாலும், உணர்வும் கருத்தும் ஒன்றுபட்டவர்களாய் மனித இனம் முழுவதும் விளங்கும் ஒரு உன்னதமான உலகத்தை நோக்கிச் செல்வதற்கு அவர் வழிகாட்டினார். பிற்போக்கு சக்திகள் மிகத் தீவிரமாய் மனித சமூகத்தைக் கூறுபோடும் தந்திரங்களை, தத்துவங்களை மிகத் திறமையாக விற்றுக் கொண்டிருக்கின்றன. சாத்தான்கள் சாபங்களை வரங்களாக விற்பதில் எப்போதுமே மிக விரைவில் வெற்றியடைந்து விடுகிறார்கள். சாத்தான்களின் தத்துவமே `பிரித்து வை, மோத விடு, கொலை செய், உனது கஷ்டத்திற்கு உன் அயலானே காரணம் என்று எப்போதும் போதிப்பதே அப்படியே செய்து வந்திருக்கிறார்கள். இப்போது இந்திய மக்களைக் கூறு போடும் சக்திகள் தங்களை உன்னதத்தின் தூதுவர்களாக நிலை நிறுத்திக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.இவற்றையெல்லாம் அம்பலப்படுத்தவும், போராடவும் முன்னெப்போதையும் விட நான் கடினமாகவும், தீவிரமாகவும் ஈர்ப்புடனும் பணியாற்ற வேண்டிய காலமிது. இந்தக்காலத்தில் பொருளாதாரச் சூழல் மிகவும் கடினமாகிக் கொண்டிருக்கிறது. பிறப்புதொட்டு இந்த அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் தமிழகத்தில் முற்போக்கு ஜனநாயக இடதுசாரி சக்திகளின் தூதுவனாகவும், பிரச்சாரகனாகவும், போர் வாளாகவும் நான் திகழ்ந்திருக்கிறேன். தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் உறுதியாக நின்று உழைப்பாளி மக்களின் குரலாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், எந்தக்காலத்திலும் பிறழாது நான் நின்றிருக்கிறேன் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.என்னை வாசிப்போர் அனைவரும் இதை உணர்ந்தே இருக்கிறார்கள். குரலற்றவர்களின் குரலாகவும், பேச்சு மறுக்கப்பட்டோரின் வாயாகவும், நிராயுதபாணியாக்கப் பட்டோரின் ஆயுதமாகவும் நான் உறுதியாக நின்றிருக்கிறேன். தமிழகத்தில் நடைபெற்ற தொழிலாளர்களின் போராட்டங்கள் அனைத்திலும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எதிரிகளின் என்மீதான குற்றச்சாட்டும் அதுதான். நான் எந்தக் காரணத்திற்காக பெருமைப்படுகிறேனோ அதற்காகவே ஆளும் வர்க்கத்தாலும், அடக்குமுறைப் பேர்வழிகளாலும் சபிக்கப்படுகிறேன். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குள் எத்தனை அடுக்குகள் இருந் தாலும் எல்லா அடுக்குகளுக்குமான பாதுகாவலாக நானே இருந்திருக்கிறேன்.
இந்தியன் என்கிற பெருமையின் அங்கமாக விளங்கும் சிறுபான்மை மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் சமரசமற்ற போராளி நான் என்பதை உரத்துச் சொல்வதில் எனக்குப் பெருமை உண்டு. இந்த தேசத்தில் சரிபாதியாக உள்ள மக்களான பெண்கள் ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் ஒதுக்குதலுக்கும் உள்ளாக்கப்படும்போதெல்லாம் அவர்களின் குரலாகவும், அவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் உந்து சக்தியாகவும் நானே விளங்கியிருக்கிறேன். ஓர் உள்ளடங்கிய கிராமம், அதில் உள்ள 500 பேர். அன்றைய அதிமுக ஆட்சியில் வனத்துறை யும், காவல்துறையும் வாச்சாத்தியில் 18 பெண்களை சின்னாபின்னமாக்கினர். அந்தப் போராட்டம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான போராட்டம்.19 ஆண்டுகள் பல்வேறு மன்றங்களில் நடைபெற்றது. அந்த 19 ஆண்டுகளும் அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக தமிழக மக்கள் அனைவரிடமும் ஓய்வில்லாது ஒலித்துக் கொண்டிருந்தது நான் தான் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. இப்படி ஓராயிரம் கதைகளையும், ஒரு லட்சம் பெருமைகளையும் நான் சொல்லிக் கொள்ள முடியும். பத்திரிகைத்துறையும், இதர வகை செய்தித்துறையும் மிக வேகமாய் வளர்ச்சியடைந்திருக்கிறது. வணிகப் பத்திரிகைகளுக்கு ஒவ்வொரு நாளும், விளம்பரங்களின் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. ஆளும் வர்க்கத்தின் அழுகிய நாற்றத்தோடு வரும் பத்திரிகைகள் ஏராளமாய் விற்பனை ஆகின்றன. வெற்றி பெற்றதெல்லாம் சரியென்று கருதும் மனப்போக்கை வெற்றி பெற்றவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சரியானதே வெற்றி பெற வேண்டும் என்பதற்கான போராட்டத்தில் என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.
நான் இன்னும் வேக மாய், இன்னும் தீவிரமாய், இன்னும் வனப்புடன் நம்மோடு நிற்க வேண்டியர்களிடம் விரைந்து சேர வேண்டிய அவசியமிருக்கிறது. அதற்காகவெல்லாம் நிதித் தேவை அதிகரித்திருக்கிறது. என்னை நிலை நிறுத்துவதும், விரிந்து பரவி வினையாற்றச் செய்வதும் உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின், ஒதுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் ஒருபகுதி. அந்தப் போராட்டத்திற்காக என்னை வளர்க்க எல்லோரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். நிர்ணயித்த இலக்கை நிறைவு செய்ய வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்.  என்றும் உங்களுடன்...தீக்கதிர்.

No comments: