Tuesday 16 September 2014

அமிலம் வீசியவர்களை கைது செய்க! பெண்கள் - மறியல்...

மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி மாணவிகள் மீது அமிலம் வீசிய நபர்களை கைது செய்யக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திங்களன்று திருமங்கலத்தில் ஆவேச மறியல் போராட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் உறுப்புக்கல்லூரி கடந்த மூன்றாண்டுகளாக இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சின்னப்பூலாம்பட்டியைச் சேர்ந்த உதயசூரியன் மகள் மீனா பி.. ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த சங்கரபாண்டியன் மகள் அங்காளஈஸ்வரி பி.. ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.வெள்ளியன்று பிற்பகல் திருமங்கலம் பெருமாள்கோவில் தெரு, செட்டியார் காம்பவுண்டு பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்த இம்மாணவிகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் அமிலத்தை ஊற்றிவிட்டு தப்பி யோடிவிட்டனர்.பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கல்லூரி மாணவிகள் மீது அமிலம் வீசிய நபர்களை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருமங்கலம் தேவர் சிலை முன்பு ஜனநாயக மாதர் சங்கத்தினர் ,இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்பட ஆயிரம் பேர் பங்கேற்ற மறி யல் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத் தலைவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, உசிலம்பட்டி ஆர்டிஓ பாலசுப்பிரமணி, திருமங்கலம் வட்டாட்சியர் பாலசுப்பிரமணி ,போலீஸ் டி.எஸ்.பி .அரசு, காவல் ஆய்வாளர் ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அமிலம் வீசிய நபர்களை கைது செய்யவும், பாதிக்கப்பட்ட மாணவிகள் குறித்த கோரிக்கைகள் பற்றியும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி யளித்தனர்.இப்போராட்டத்தில், ஜனநாயக மாதர் சங்க மாநிலச்செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மதுரை புறநகர் மாவட்டத்தலைவர் ஆர்.பிரே மலதா, செயலாளர் சி.முத்துராணி, மதுரை மாநகர் தலைவர் மா. செல்லம் எம்.சி., செயலாளர் சசிகலா, விருதுநகர் மாவட்ட தலைவர் ஜோதிலெட்சுமி, செயலாளர் லட்சுமி மற்றும் இந்திய மாணவர் சங்க மதுரை புறநகர் மாவட்டத்தலைவர் கார்த்திக், செயலாளர் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் மலர் விழி, மாநகர் மாவட்டத் தலைவர் செல்வா, சிஐடியு சார்பில் கௌரி, பாண்டிச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் செல்லக் கண்ணு, அரவிந்தன், தாலுகா செயலாளர் ஆண்டவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செய லாளர் சுப்புக்காளை ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை, மதுரை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாத்துரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

No comments: