Monday 8 September 2014

NLCபோராட்டம்: அரசு தலையிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

நெய்வேலி காண்ட்ராக்ட் தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலியில் பணிபுரியும் 13000 காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் பணிநிரந்தரம் கோரி பல ஆண்டு காலமாக போராடி வருகிறார்கள். கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் நெய்வேலி காண்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டுமென்று தீர்ப்பளித்தது. ஆனாலும் என்.எல்.சி. நிர்வாகம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமலாக்கிட மறுத்து வருகிறது.நெய்வேலி காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் அனைவரும் நிரந்தரத் தன்மையுள்ள பணிகளில் வேலை செய்து வருகின்றனர். தங்களை நிரந்தரமாக்க வேண்டும் அதுவரையில் சமவேலைக்கு சம ஊதியம் என்ற சட்டத்தின் அடிப்படையில் மாதம் ரூ.25,000 ஊதியம் வழங்க வேண்டுமென்று கடந்த 3.9.2014 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெய்வேலியில் உள்ள அனைத்து தொழிற்சங்க ஆதரவுடன் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கு முன்வரவில்லை. மாறாக தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முயற்சித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனம் என்ற அடிப்படையில் முன்மாதிரியாக இருப்பதற்கு பதிலாக உச்ச நீதிமன்ற தீர்ப்பையே அமலாக்கிட என்.எல்.சி. நிர்வாகம் மறுத்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.13 ஆயிரம் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிற போது நெய்வேலியில் மின்உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும். இது தமிழகத்தை பாதிக்கும். மத்திய அரசும், மாநில அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சரியான அணுகுமுறையல்ல. மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக தலையிட்டு போராடும் நெய்வேலி காண்ட்ராக்ட் தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்
.

No comments: