Saturday 28 November 2015

உலக வர்த்தக மையத்தின் விருப்பத்திற்கேற்ப கல்வியை சந்தைப்பொருளாக்க உடன்படுவதா? மோடி அரசிற்கெதிராக ஆசிரியர் - மாணவர்கள் மாபெரும் பேரணி

உலக வர்த்தக மையத்தின் விருப்பத்திற்கேற்ப கல்வியை சந்தை பொருளாக்க, இந்திய அரசு விருப்பம் தெரிவித்திருப்பதை திரும்பப் பெற வேண்டும் என்று கல்வி பாதுகாப்பிற்கான தேசிய மேடை சார்பில் புதுதில்லியில் மாபெரும் பேரணி நடைபெற்றது. உலக வர்த்தக நிறுவனத்தின் சேவையில் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்த அடிப்படையில் கல்வியை சந்தை பொருளாக்க இந்திய அரசு விருப்பம் தெரிவித்திருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பட்ட கல்வி அறிஞர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் கல்வி முழுவதும் வணிகமயமாக்கப்படும். அப்போது காசு உள்ளவர்க்கே கல்வி என்ற நிலை உருவாக்கப்படும். இதன் மூலம் ஏழை, எளியோருக்கான கல்வி வாய்ப்பு முற்றிலுமாக மறுக்கப்படும். இந்த அபாயத்தில் இருந்து இந்தியா விடுபடவேண்டும். இந்திய அரசு கல்வியை சந்தைபொருளாக்க உலக வர்த்தக நிறுவனத்திடம் விருப்பம் தெரிவித்திருப்பதை திரும்பப் பெற வேண்டும். மேலும் மத்திய பாஜக தலைமையிலான மோடி அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியார் மயத்தையும், மதவெறியையும் புகுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பேரணியின் போது வலியுறுத்தப்பட்டது. முன்னதாக வியாழனன்று காலை புதுதில்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து பேரணி துவங்கியது. இந்த பேரணி ஜந்தர்மந்தர் வரை சென்றது. அங்கு ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.

No comments: