Tuesday 17 November 2015

மருத்துவத்தில் சிறந்த முன்மாதிரி: கியூபாவிற்கு ஐ.நா. சபை பாராட்டு.

எச்..வி. எய்ட்ஸ் வைரசைச் கட்டுப்படுத்துவதில் சிறந்த முன்மாதிரி நாடாக கியூபா இருந்து வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது.கியூபாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் திட்டத்தின் செயல் இயக்குநர் மைக்கேல் சிடிப் இதைத் தெரிவித்திருக்கிறார். மேலும் கூறுகையில், எச்..வி மற்றும் எய்ட்சுக்கு எதிரான போராட்டத்தில் கியூபாவின் பங்கு எங்களுக்குப் பெருமையளிப்பதாக உள்ளது. சமூக ரீதியான அவர்களின் அணுகுமுறை அற்புதமானதாகும். எச்..வி. மற்றும் எய்ட்ஸ் தாக்கப்பட்டவர்களுக்கு கியூபா மருத்துவர்கள் அளித்துள்ள சிகிச்சைக்கான முடிவுகள் முக்கியமானதாக அமைந்துள்ளன. வருங்காலப் பொது மருத்துவம் வளர்வதற்கு உத்வேகமாக இவை அமையும் என்று குறிப்பிட்டார்.ஜூன் மாதத்தில், தாயிடமிருந்து குழந்தைக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்கும் சிகிச்சையில் கியூபா வெற்றி பெற்றது. அத்தகைய சாதனையைப் படைத்த முதல் நாடு கியூபா என்பது குறிப்பிடத்தக்கதாகும். 90-90-90 என்ற இலக்கை அடையும் முதல் நாடாக கியூபாதான் இருக்கப்போகிறது என்று மைக்கேல் சிடிப் தெரிவிக்கிறார். 90 சதவிகித நோயாளிகளுக்கு அவர்களுக்குத் தரப்படும் சிகிச்சையின் முழுவிபரங்களையும் தருவது, பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதப் பேருக்கு அவர்களுக்கான மருந்துகளை உத்தரவாதப்படுத்துவது மற்றும் 90 சதவிகித மக்களுக்குப் பாதிப்பைக் குறைப்பது ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்டுதான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் கியூபாவின் முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்ட மைக்கேல் சிடிப், கியூபாவில் நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள நாம் முயற்சிப்போம். முதல் இலக்கை கியூபா அடைந்துவிட்டது.நோய் மீதோ அல்லது மருத்துவமனைகள் மீதோ அதிகம் கவனம் செலுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை கொடுப்பதே கியூபாவின் அணுகுமுறைகளில் ஒன்றாகும் என்று தெரிவித்தார்.

No comments: