Tuesday 7 October 2014

கூலி உயர்வு,போனஸ்கோரி அக். 8ல் வேலைநிறுத்தம்...

நைஸ்ரக கைத்தறி தொழிலாளர்களுக்கு 40 சதவீதம் கூலி உயர்வு வேண்டும். தீபாவளிக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 8- ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.  இதுகுறித்து அனைத்து நைஸ்ரக கைத்தறி தொழிற்சங்க ஐக்கியக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : -மதுரை மாநகர் மற்றும்கைத்தறி நகர்,  சக்கிமங்கலம், வண்டியூர்,பெருங்குடி,அவனியாபுரம்,  திருநகர்,பாம்பன்நகர், கடச்சனேந்தல், ஸ்ரீனிவாசா காலனி,எல்.கே.டிநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் நைஸ்ரக கைத்தறி ஜவுளி ரகமான வேஷ்டி, கோடம் பாக்கம் ரக சேலைகள், பட்டுச்சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நைஸ்ரக கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் கடுமையான விலை உயர்வு,வாடகை உயர்வு காரணமாக மிக சிரமான நிலையில்வாழ்ந்து வருகின்றனர்.மாற்று வேலைவாய்ப்பின்றி வாழ்க்கை நடத்த கஷ்டப்படும் நைஸ்ரக கைத்தறி நெசவாளர்களின் கூலி உயர்வு, போனஸ் உயர்வு குறித்த ஒப்பந்தம் வருகிற 21.10.2014 தேதியோடு காலாவதியாகிறது. இந்நிலையில், நைஸ்ரககைத்தறி தொழிலாளர்களுக்கு 40 சதவீத கூலி உயர்வு மற்றும் தீபாவளிக்கு 20 சதவீதம்போனஸ் வழங்க வேண்டும்என அனைத்து தொழிற்சங்க ஐக்கிய குழு நிர்வாகிகள் வலியுறுத்தி யுள்ளனர். இக்கூட்டமைப்பின் தலைவர் டி.ஆர்.பத்மநாபன் (ஏடிபி), செயலாளர் டி.கே.சுப்பிரமணியன் (சிஐடியு), பொருளாளர் .எஸ்.ரவீந்திரன் (ஜேடிஎல்எப்), இணைச் செயலாளர் கே.என்.கோபி நாத்(எல்பிஎப்), துணைத் தலைவர்கள் எம்.ஆர்.சத்தியமூர்த்தி (ஏஐடியுசி), டி.எம்.ஜெகநாதன் (எல்பிஎப்), துணைச் செயலாளர் என்.ஆர். சுதர்சன் (பிஎம்எஸ்) மற்றும் உற்பத்தியாளர் பிரதிநிதிகள், மாவட்ட தொழிலாளர் அலுவலர் முன்னிலையில் கூலி உயர்வு, போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் உடன்பாடு ஏற்படவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.8 - ம் தேதி நைஸ்ரக கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது, அக்.8- ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் தொடர் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மற்றும் மறியல் போராட்டம் நடத்துவது என அனைத்து கைத்தறி தொழிற்சங்க ஐக்கிய குழு முடிவு செய்துள்ளது.

No comments: