Saturday 25 October 2014

NLC- வேலைநிறுத்தம் வாபஸ்: பேச்சில் உடன்பாடு...

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர் வேலைநிறுத்தம் வாபஸ்: பேச்சில் உடன்பாடு
கடந்த 52 நாள்களாக நடைபெற்று வந்த நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர் வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமை (அக்.24) இரவு வாபஸ் பெறப்பட்டது.ஒப்பந்தத் தொழிலாளர்களின் தின ஊதியத்தை ரூ.370-லிருந்து உடனடியாக ரூ.55 அதிகரிப்பது, அடுத்த ஆண்டு நவம்பர் முதல் மேலும் ரூ.55 அதிகரிப்பது என உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றது. ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது, சம்பளத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்ந்து 52 நாள்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, சென்னை சாஸ்திரி பவனில் வெள்ளிக்கிழமை முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள், நெய்வேலி அனல்மின் நிலைய நிர்வாகத்தினர் ஆகியோரோடு அரசு சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை இரவு 9 மணி வரை பேச்சு நடத்தினர். தொமுச, அண்ணா தொழிலாளர் சங்கப் பேரவை, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, தமிழக வாழ்வுரிமைச் சங்கம் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.உடன்பாடு: பேச்சுவார்த்தையின் முடிவில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் தற்போதுள்ள தின ஊதியத்தை ரூ.370-லிருந்து ரூ.480-ஆக (ரூ.110 உயர்வு) உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

No comments: