அபரிமிதமாக சொத்துக்கள் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திட மத்திய அரசு மேற்கொண்டுள்ள பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை, விரைந்து விற்பனை செய்வதற்கு ஏதுவாக நிதி ஆயோக் அமைப்பு ஒரு பட்டியலையே பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கு வழி செய்து தருவதற்கும், அரசின் கருவூலத்திற்கு மேலும் மூலதன முதலீட்டை அதிகரிப்பதற்கு ஏர் இந்தியா, ஃபேக்ட், சென்னை பெட்ரோலியம், மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் போன்ற மத்திய பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக முடக்குவதோடு மட்டுமல்லாமல், தனியாருக்குத் தாரை வார்த்திடவும் திட்டமிட்டுள்ளது. முந்தைய தேஜகூ ஆட்சிக் காலத்தின்போதும் இதேபோன்று ஐபிசிஎல், பால்கோ போன்ற மத்தியபொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் அதன் உண்மையான சொத்தின் மதிப்பீட்டில் நான்கில் ஒரு பங்கு விலைக்கே தனியார் ஒரேயொருவருக்கு மட்டும் தாரை வார்க்கப்பட்டிருந்ததை மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவர் (சிஏஜி) இடித்துரைத்திருந்தார்.அதேபோன்று இப்போது நரேந்திர மோடிஅரசாங்கமும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்திட முடிவு செய்திருக்கிறது. ஈராண்டு கால மோடிஆட்சி புதிதாக நிறுவனங்கள் எதையும் உருவாக்கிடவில்லை, அதன் மூலம் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திடவில்லை. மாறாக ஊடகங்களின் வாயிலாக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிற அதே சமயத்தில், மத்தியபொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும் தனியாருக்குத் தாரை வார்த்திட நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.இவ்வாறு தாரை வார்க்க பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் “முன்னுரிமை அல்லாத பொதுத்துறை நிறுவனங்கள்’’ என்று நிதி ஆயோக் கூறுகிறது. ஏர் இந்தியா, பெட்ரோலியம் நிறுவனங்கள், உர உற்பத்திப் பிரிவுகள் ஆகியவற்றை முன்னுரிமையற்ற நிறுவனங்கள் என்று எவராவது கூற முடியுமா? எவராலும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு பிரம்மாண்டமாக வளர்ச்சி பெற்றுள்ள இந்நிறுவனங்களைத்தான் நரேந்திர மோடி அரசு தாரை வார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. நாட்டுநலனில் கிஞ்சிற்றும் கவலையற்று, கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அபரிமிதமாக சொத்துக்கள் உடைய மத்தியபொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் இத்தகையபிற்போக்கு நடவடிக்கைகள் நாட்டிலுள்ள தொழிலாளி வர்க்க இயக்கத்தின் மூலமாக முறியடிக்கப்பட்டாக வேண்டும். இதற்காக அனைத்து தொழிற்சங்கங்களையும், சம்மேளனங்களையும் உள்ளடக்கிய நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தின் ஐக்கிய மேடை வரும் செப்டம்பர் 2 அன்று நடத்திடவுள்ள பொது வேலை நிறுத்தத்தின்போது முன்வைத்துள்ள கோரிக்கைகளில், நாட்டின் பொருளாதாரத்தையும், நாட்டின் தொழிலாளி வர்க்கத்தையும் பாதுகாப்பதற்காக பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது என்கிற இக்கோரிக்கையையும் இணைத்துக் கொள்ள வேண்டும். 2016 செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் சமயத்தில் சிஐடியுவும் அதன் அமைப்புகளும் இக்கோரிக்கையையும் இணைத்துக் கொண்டு இயக்கங்கள் நடத்திட வேண்டும்.இவ்வாறு தபன்சென் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment