Monday 14 October 2013

மக்கள் நீதிமன்றத்தில் திருநங்கை வழக்குகளை விசாரித்தார்.

மதுரை,
நாட்டிலேயே முதல் முறையாக மதுரை கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் திருநங்கை ஒருவர் வழக்குகளை விசாரித்தார். முடிவில், 19 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.26 லட்சம் வங்கிக்கடன் வசூல் செய்யப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் மாதம் 5 முறை மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்படுகிறது. இதில், காசோலை மோசடி, சிவில் மற்றும் சிறு குற்றங்கள், விபத்து காப்பீடு, வங்கி கடன்கள் போன்றவை தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மக்கள் நீதிமன்றத்தில் இருதரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுகதீர்வு காணப்படும்.அதுபோன்று நடக்கும் மக்கள் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரும், இலவச சட்ட உதவி வக்கீல் ஒருவரும், தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சமூக சேவகர் ஒருவரும் அமர்ந்து வழக்குகளை விசாரித்து முடிவு எடுப்பார்கள்.
திருநங்கை நியமனம்
மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதியுமான கோகுல்தாஸ் அனுமதியுடன் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்கும் குழுவில் சமூக சேவகர் தரப்பு பிரதிநிதியாக திருநங்கை பாரதிகண்ணம்மாவை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான  ஜெசிந்தா மார்ட்டின்  நியமித்துள்ளார்.
அதன்படி நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி நாகராஜன், இலவச சட்ட உதவி வக்கீல் எஸ்.முத்துக்குமார் ஆகியோருடன் திருநங்கை பாரதிகண்ணம்மா அமர்ந்து வழக்குகளை விசாரித்தார்.
19 வழக்குகளில் தீர்வு
வங்கிக்கடன் பெற்றுவிட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி செலுத்தாதவர்களின் வழக்குகள் நேற்றைய விசாரணையின்போது எடுத்துக் கொள்ளப்பட்டன. வங்கி நிர்வாகம் மற்றும் கடன் பெற்றவர்களை சமாதானப்படுத்தி பிரச்சினைக்கு சுமுகதீர்வு காண திருநங்கை பாரதிகண்ணம்மா மற்றும் குழுவினர் முயற்சிகள் மேற்கொண்டனர்.அதன்படி, 19 வழக்குகளில் சுமுகதீர்வு காணப்பட்டு ரூ.26 லட்சம் வங்கிக்கடன் வசூலிக்கப்பட்டது.

No comments: