Wednesday 16 October 2013

நிலக்கரி சுரங்க முறைகேடாக ஒதுக்கீடு ஆதித்ய பிர்லா- மீது சிபிஐ..

கடந்த 2005-ஆம் ஆண்டில் நிலக்கரிச் சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்கீடு பெற்றதாக ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மீது சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) வழக்குப் பதிவு செய்துள்ளது.மேலும், அவரது குழும நிறுவனமான ஹிண்டால்கோ, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக், பெயர் குறிப்பிடாத சில அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ பதிவு செய்யும் 14-ஆவது முதல் தகவல் அறிக்கை இது ஆகும்.1993-2011-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தை சிபிஐ கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரித்து வருகிறது.1993-2004, 2006-2009 ஆகிய கால கட்டங்களில் நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 13 முதல் தகவல் அறிக்கைகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.இந் நிலையில், 2005-ஆம் ஆண்டில் ஒடிசா மாநிலத்தில் உள்ள தலபிரா-2, 3 ஆகிய நிலக்கரிச் சுரங்கங்களுக்கான ஒதுக்கீட்டை ஆதித்ய பிர்லா குழுமத்தின் நிறுவனமான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் முறைகேடாகப் பெற்றதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது.அந் நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்க சில அரசுத் துறை அதிகாரிகள் உதவியதாகத் தெரிய வந்தது.
சிபிஐ திடீர் சோதனை: இந்த விவகாரம் தொடர்பான ஆரம்பநிலை விசாரணை அறிக்கையை சிபிஐ கடந்த மாதம் பதிவு செய்தது. அதன் அடிப்படையில் 2005-ஆம் ஆண்டில் மத்திய நிலக்கரித் துறைச் செயலராக இருந்த பி.சி. பரேக்கின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.மேலும், புது தில்லி, மும்பை, செகந்தராபாத், புவனேசுவரம் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஆதித்ய பிர்லா குழும நிறுவனமான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் அலுவலகங்களிலும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். அதில், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.எஃப்ஐஆர் பதிவு: இதையடுத்து, பி.சி. பரேக் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழும், ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, ஹிண்டால்கோ நிறுவனம் மற்றும் பெயர் குறிப்பிடாத சில அதிகாரிகள், தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் மீது மோசடி, உள்நோக்கத்துடன் குற்றம் புரிதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழும் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. அவர்கள் விரைவில் விசாரணைக்காக அழைக்கப்படுவர் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனிடையே சி.பி.. செய்தித் தொடர்பாளர் காஞ்சன் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2005-ல் ஒடிசா மாநிலம் தலபிரா 2, 3 ஆகிய நிலக்கரிச் சுரங்கங்களுக்கான ஒதுக்கீட்டை ஆதித்ய பிர்லா குழுமம் முறைகேடாகப் பெற்றுள்ளது. தலபிரா 2 நிலக்கரிச் சுரங்கம் தமிழக அரசுத் துறை நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்துக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு அச் சுரங்கம் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அச் சுரங்கத்தை என்.எல்.சி. நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தில் அமர்கோண்டா முர்கடங்கல் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை ஜிண்டால் குழுமம் 2008-ஆம் ஆண்டில் பெற்றதில் முறைகேடு நடந்ததாகக் கடந்த ஜூன் மாதம் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, அந் நிறுவன அதிபர் நவீன் ஜிண்டால் உள்ளிட்டோரிடம் கடந்த மாதம்தான் சிபிஐ விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments: