Tuesday 15 October 2013

இது தான் குஜராத் . . . இன்னொரு முகம் ....

குடிநீர்...குஜராத்கிராமங்களின்துயரம்….
நம் ஊரில் தண்ணீர் லாரி வரும் சத்தம் கேட்டாலே போதும். இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு அவசர அவசரமாகக் குடத்தைத் தூக்கிக்கொண்டு ஓடுவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருப்பார்கள்.இன்றும் பல கிராமங்களில் தண்ணீர் எடுத்து வருவதற்கு ஒரு நாளில் பல மணி நேரங்கள் தாய்மார்கள் செலவிட வேண்டியிருக்கிறது. குழாயடிச் சண்டை என்றதும் நம் நினைவிற்கு வருவதும் பெண்கள்தான். ஏனென்றால், தண்ணீர் பிடிக்கும் வேலை பெரும்பாலும் பெண்களைச் சார்ந்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல், சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது என்று தண்ணீர் பயன்பாட்டுள்ள எல்லாப் பணிகளும் குடும்பத்தில் இருக்கும் மகளிர் சார்ந்ததாகவே இருக்கின்றன. எனவே தண்ணீர் தொடர்பான பற்றாக்குறை, மாசுபாடு ஆகியவற்றின் வலியும் வேதனையும் பெரும்பாலும் பெண்களுக்கானதாகவே உள்ளது.குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமப்புறப் பெண்கள் தண்ணீர் சேகரிப்பதற்காக மட்டும் ஒவ்வொரு நாளும் கிட்டதட்ட ஆறுமணிநேரம் செலவிடுகிறார்கள்.மழைக்காலங்களில் நிலைமை இன்னும் மோசம். சேறும் சகதியும் மேடும் பள்ளமும் உள்ள சிதைந்த பாதைகளின் வழியாகத் தண்ணீர் கொண்டு வருவது என்பது மேலும் பலமணி நேரங்களை எடுத்துக் கொள்கிறது. மிகவும் அத்தியாவசதியமான தண்ணீரைச் சேகரிப்பதிலேயே பாதி நாள் கடந்துவிடுவதால் அங்குள்ள இளம் பெண்கள் பள்ளிப்படிப்பைப் பாதியிலே விட்டுவிட வேண்டிய நிலை. இதனால் மனித ஆற்றல் பயனற்றுப் போவதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது எனக் கூறுகிறது. சர்வதேச சுகாதார மற்றும் கல்வி அறக்கட்டளை அறிக்கை.
- இந்து (அக்.13), தமிழ் ஏட்டில்..எம்.ஆர்.சோபனா கட்டுரையிலிருந்து…. 

No comments: