Wednesday 22 June 2016

எங்கள் செல்வம் கொள்ளை போகவோ?

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை போகவோ, நாங்கள் சாகவோ?” என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முரசு கொட்டினான் கவிசக்கரவர்த்தி பாரதி. கண்ணீரும் செந்நீரும் சிந்தி விடுதலைபெற்ற தாய்த்திருநாட்டை மீண்டும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு பந்தி வைக்கும் இழிசெயலில் மோடி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மருந்து உற்பத்தி, ராணுவம், விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் நலனை காவுகொடுக்கவும் மத்திய அரசு துணிந்துள்ளது.அரசு இந்த தேச விரோத முடிவை மேற்கொண்ட அதே நாளில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வுமையத்திலிருந்து நமது விஞ்ஞானிகள் தெரிவித்தசெய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது. 20 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் புதன்கிழமை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட உள்ளது. பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளை இந்த செயற்கைக் கோள் மேற்கொள்ளும். விண்வெளித்துறையிலும் பாதுகாப்புத் துறையிலும் நமது விஞ்ஞானிகளின் சாதனை உலகத்தரத்துக்கு ஈடுகொடுக்க வல்லது. இந்நிலையில் பாதுகாப்புத்துறையில் அந்நிய முதலீட்டுக்கு ரத்தின கம்பளம் விரிக்க வேண்டிய தேவை என்ன? நமது நாட்டின் பட்ஜெட்டில் ராணுவத்திற்கு கணிசமான தொகை ஒதுக்கப்படுகிறது. இதை வாரிச்சுருட்டும் நோக்கத்தோடுதான் ராணுவத்தளவாட உற்பத்தியில் பன்னாட்டு நிறுவனங்கள்படையெடுக்கின்றன. மருந்து உற்பத்தியிலும் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப் பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்து உள்ளிட்ட அத் தியாவசிய மருந்து பொருட்களை என்ன விலைக்குவேண்டுமானாலும்விற்று கொள்ளையடிக்கலாம்என ஏற்கனவே அரசு விதிகளை தளர்த்திவிட் டது. தற்போது பன்னாட்டு மருந்து கம்பெனிகளும் மக்களை பணையம் வைக்கவும் அரசு தலைப்பட்டுள் ளது. விமான நிறுவனங்களிலும் நூறு சதவீத முதலீடு வருகிறது. இந்த அறிவிப்பு வெளியான மறு நிமிடமே தனியார் நிறுவன கம்பெனிகளிடமே பங்கு மதிப்புகணிசமாக உயர்ந்தன. வெளிநாடுகளில் காலாவதியான விமானங்கள் இந்திய வானில் இனி வட்டமிடப்போகின்றன.
பெரு முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் ஊடகங்கள் உதவியுடன் ஆட்சியதிகாரத்தை அபகரித்தநரேந்திர மோடி நவீன தாராளமயக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் கொஞ்சமும் கூச்சப்படுவதில்லை. நாட்டின் முதுகெலும்பாக திகழும் ரயில்வேத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து அதை சீரழித்து வருகிறது. கோடிக்கணக்கானமக்களின் சேமிப்பையும் பாதுகாத்து அரசுத்துறைகளின் வளர்ச்சிக்கு வாரி வழங்கி வரும் காப்பீட்டுத்துறையிலும் அந்நிய முதலீட்டை வெட்கமின்றி நுழைத்துள்ளது. ரியல் எஸ்டேட் வணிகத்திலும் அந்நியமுதலீட்டுக்கான விதிகளை தளர்த்தியுள்ளது. அந்நிய முதலீடு வருவதால் வேலை வாய்ப்புபெருகும் என்று மத்திய அரசு தரப்பில் பித்தலாட்டப்பிரச்சாரம் செய்யப்படுகிறது. அந்நிய முதலீடு அதிகரிப்பால் உள்நாட்டு தொழில்கள் அழியும். உள்ளவேலைவாய்ப்பும் பறிபோகும் என்பதே உண்மை. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்புப்பணத்தை கைப்பற்றி வருவேன் என்று மோடி சவடால் அடித்தார். தற்போது உள்நாட்டில் உள்ள செல்வத்தையும் வெளிநாட்டுக் கம்பெனிகள் அள்ளிச் செல்ல சலிக்காமல் பாடுபட்டு வருகிறார்.

No comments: