Sunday, 31 August 2014
"பயமாக இருக்கிறது அங்கிள்"...
“நமது சகாப்தத்திலேயே இதுவரை கண்டிராத அளவு மிகப்பெரும் மனிதத் துயரமாக இதைக் கருதுகிறேன். இத்தனை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வீடுகளையும் உற்றார் உறவினர்களையும் இழந்து அகதிகளாக மாற்றப்பட்டிருப்பது சிரியாவில் மட்டுமே.”- ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நலனுக்கான ஆணையத்தின் தலைவர் அந்தோனியோ குடிரெஸ், இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படி கூறியிருக்கிறார்.சிரியாவில் எண்ணெய் வளத்தை கைப்பற்றும் ஒரே நோக்கத்துடன், அந்நாட்டில் மதவெறி பிடித்த பயங்கரவாதிகளை ஆயுதங்களுடன் ஏவிவிட்டு வரலாறு காணாத உள்நாட்டு யுத்தத்தை கடந்த மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். அதன் கைக்கூலியான சவூதி அரேபியாவும் அதன் கூட்டாளி நாடுகளும், சிரியாவில் உள்நாட்டு யுத்தத்தின் பயங்கரம் குறையாமல் பார்த்துக் கொள்கின்றன.இதன் விளைவு...
இதுவரை 1 லட்சத்து 90ஆயிரம் அப்பாவி மக்கள் படுகொலை* 30லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடிழந்து, உறவுகள் இழந்து நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர்.உள்நாட்டிற்குள்ளேயே அவரவர் இருப்பிடங்களை இழந்து சுமார் 65 லட்சம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர்.மொத்தத்தில் ஒரு கோடி மக்கள் அகதிகளாக தவிக்கின்றனர்.* இது சிரியாவின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி என்பது அதிர்ச்சிகரமானது.* நாட்டைவிட்டு வெளியேறி அகதிகளாக சிரிய மக்கள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அப்படி வருபவர்கள் அனைவரும் உடல் அளவிலும் மனதளவிலும் கொடிய துயரத்தின் பிடியில் சிக்கியவர்களாக இருக்கின்றனர்.* துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகளின் எல்லைகளில் இந்த அகதிகள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மொத்தம் 30லட்சம் பேர் இந்த எல்லைகளுக்கு வந்துள்ளபோதிலும், இதுவரை வெறும் 4 லட்சம் பேருக்கு மட்டுமே ஐ.நா. சபை மற்றும் இதர அமைப்புகளால் தற்காலிக குடிசைகள் அமைத்து தரப்பட்டுள்ளன.
எஞ்சிய 26 லட்சம் பேரும் வெட்டவெளியில் கொடும் வெயிலில் உணவின்றி, நீரின்றி, உயிரைக் கையில் பிடித்து ஓடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் குழந்தைகள் மட்டும் 15லட்சம் பேர் ஜெராட்டா எனும்அகதிகள் முகாமில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் பத்திரிகையாளர்கள் உரையாடுகின்றனர்.“எங்கள் அப்பாவைக் காணோம்;வருவாராம்... அம்மா சொன்னார்கள்...”“எங்கள் பள்ளிக் கூடம் இடிந்து கிடந்தது...”“எங்கள் தெரு முனையில் ரத்தமாக இருந்தது”“பயங்கரமாக வெடிக்கும் சப்தம் வீட்டருகே கேட்டது”“பயமாக இருக்கிறது அங்கிள்...”
Saturday, 30 August 2014
30.08.14-கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு நாள்.

பிறப்பு : 1908 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் “நாகர்கோவிலுக்கு” அருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில், ‘சுடலையாண்டி பிள்ளை’, என்பவருக்கும், ‘இசக்கியம்மாலுக்கும்’ மகனாக ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை:மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கல்வி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே போய்விட்டது. நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சிறுவயதிலேயே நாடகக் கொட்டையில் தின்பண்டங்கள் விற்கத் தொடங்கினார். நாளடைவில் நாடகங்கள் அவரை மிகவும் ஈர்த்ததால், ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக்குழுவை தொடங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.
சிரிக்க வைத்த மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர்:இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக சிந்தனை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். அறிவியல் கருத்துக்களையும், தன்னுடைய நகைச்சுவை வாயிலாக வெளிப்படுத்தியவர். பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். குறிப்பாகச் சொல்லப்போனால் என். எஸ். கிருஷ்ணன் அவரகள், சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதானால் தான் இவருக்கு “கலைவாணர்” என்ற பட்டம் 1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
இல்லற வாழ்க்கை:1931 ஆம் ஆண்டு நாகம்மை என்னும் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, ஒரு முறை “வசந்தசேனா” படப்பிடிப்பிற்காக புனேவிற்கு சென்ற போது, டி. எம். மதுரம் என்ற நடிகையுடன் காதல் வயப்பட்ட இவர், விரைவில் திருமணமும் செய்துக்கொண்டனர். இவர் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆவார். பின்னர், டி. எம். மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாக மணம் புரிந்தார். நாகம்மைக்கு கோலப்பன் என்னும் மகனும், டி. எம். மதுரத்திற்கு ஒரு பெண் குழந்தையும், வேம்புக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.
மறைவு:நகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார்.
சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரைமாவட்ட முதல் மாநாடு!
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மதுரைமாநகர் மாவட்ட முதல் மாநாடு ஆகஸ்ட் 31 ம் தேதி நடைபெறுகிறது.மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் மாலை 3 மணியளவில் நடைபெறும் மாநாட்டிற்கு மாவட்ட அமைப்பாளர் என்.நன்மாறன் தலைமை வகிக்கிறார். வரவேற்புக்குழு தலைவர் ஹாஜி ஏ.செய்யது முன்னிலை வகிக்கிறார். வழக்கறிஞர் என்.முத்து அமுதநாதன் வரவேற்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் அரசு டவுன் ஹாஜியார், மதுரை, முகவை சிஎஸ்ஐ திருமண்டலச் செயலர் டாக்டர் தாசையன், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் பேரா.பஷீர் அகமது, பாரதி தேசியப் பேரவைத்தலைவர் க.ஜான்மோசஸ், எட்வர்டு மன்ற செயலாளர் முனைவர் ஐ.இஸ்மாயில், மதுரை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க செயலர் பேரா. ஏ.கே. தஷ்ஃரீப் ஜஹான் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில அமைப்பாளருமான எஸ்.நூர்முகமது மாநாட்டினை நிறைவு செய்துவைத்து உரையாற்றுகிறார். டி.சாலமன் நன்றி கூறுகிறார்.சிறுபான்மை மக்களைக் காப்பதற்கான தீர்மானங்களை முன்மொழிந்து என்.ஜெயச்சந்திரன், எஸ்.பாலா ( ஏஐஐஇஏ), இரா.மணிமேகலை, பா.அந்தோணிசாமி, ஜெ. எகியா ஆகியோர் பேசுகின்றனர். முன்னதாக இசைஅறிஞர் நா.மம்முது, ராஜா முகமது, அப்துல் ரஹீம், சி.இராயப்பன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதுரை புத்தகத் திருவிழா தொடங்கியது
மதுரை 9வது புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ( பபாசி ) சார்பில் நடைபெறும் மதுரை 9 வது புத்தகத்திருவிழாவை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத்திருவிழா தொடக்கவிழா வெள்ளியன்று மாலை நடைபெற்றது. நல்லிகுப்புசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க மெ.மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்புரையாற்றினார். மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். திரைப்பட இயக்குநர் மிஷ்கின் கருத்துரையாற்றினார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் கே.எஸ்.புகழேந்தி நன்றிகூறினார். விழாவில் கரிசல் திருவுடையானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.புத்தகத் திருவிழா செப்டம்பர் 7 ம் தேதி வரை நடைபெறுகிறது.புத்தகத்திருவிழாவில் சனிக்கிழமையன்று மாலை 6 மணியளவில் “வாசித்தலே சுவாசித்தல் ’’ என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,“சங்க இலக்கியக் கொடை” என்ற தலைப்பில் முனைவர்சுந்தர ஆவுடையப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.பாரதி புத்தகாலய அரங்கு மதுரை புத்தகத்திருவிழாவில் பாரதி புத்தகாலயத்தின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.170 மற்றும் 171 ஆகிய அரங்குகளில் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு புத்தகங்கள் கிடைக்கும்.
Subscribe to:
Posts (Atom)