பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பார்கள்; அத்தகைய பெண்கள் தங்கள் கண்களை தானம் செய்தால்...?! -"ஒரு ஸ்வீட் ஸ்டாலே, ஸ்வீட் சாப்பிடுகிறதே, அடடே ஆச்சர்யக்குறி!" என்பது போல் தித்திப்பான செய்தி தானே...!
கண்கள் நமக்கு இயற்கை கொடுத்த அற்புதமான உறுப்பு; கண் பார்வையின் மூலம் உலகம் நமக்கு எளிதாக அறிமுகமாகிறது. இயற்கையை ரசித்து சிலாகிக்க, நமது பணிகளை நாம் உடனடியாக செய்யவும், அனைத்து வேலைகளுக்கும் நாம் கண்ணின் உதவியை நாடுகிறோம். இப்படி ,வாழ்வில் ஒளிமூலம் ஏற்படும் நிகழ்வுகளை காட்சி படுத்த நமக்கு உதவுகிறது கண். இதனால் தான், கண்களை அதிகமாக உவமைப்படுத்தி இருக்கிறார் வள்ளுவர். உலகில் 43 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்வை யிழப்பால் அவதிப்படுகின்றனர். இதேபோல் நம் இந்திய நாட்டில் 10 லட்சம் மக்கள் கருவிழி நோயால் பார்வை இழந்துள்ளனர். ஆனால், நம் நாட்டில் ஆண்டொன்றுக்கு இருபதனாயிரம் பேர் மட்டுமே கண் தானத்தால் பார்வை பெறுகின்றனர். எஞ்சியவர்களின் நிலை முற்றிலும் கேள்விக் குறியே.இதை உணர்ந்த காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியை சேர்ந்த 110 மாணவிகள் மற்றும் 10 பேராசிரியர்கள், கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், ஒருவரின் கண் தானத்தால் இருவர் பலனடைய வேண்டியும், தங்களின் கண்களை தானம் செய்ய முன் வந்துள்ளனர்.இதுகுறித்து கண் தானம் செய்த கல்லூரி முதல்வர் ஹேமமாலினி கண் தானம் பற்றி கூறும்போது, ''நானும் கண் தானம் செய்துள்ளேன். கண் தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவிகளிடமும் அவர்களின் பெற்றோரிடமும் எடுத்துக் கூறினோம். கண் தானத்தின் சிறப்பினை உணர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண் தானம் செய்ய ஊக்குவித்துள்ளனர்.இதை விளம்பரத்திற்காக நாங்கள் செய்யவில்லை, மனமுவந்து மகிழ்ச்சியோடு வழங்கியுள்ளோம். கண் தானம் செய்யும்போது, கருவிழி எனப்படும் கார்னியா பகுதி மட்டும்தான் தானமாக பெற்றுக்கொள்ளப்படுகிறது" என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.கண் தானம் செய்துள்ள எம்.எஸ்.சி. இறுதி ஆண்டு படிக்கும் மாணவி சிவரஞ்சனி கூறும்போது, ''நாம் இறந்ததிற்கு பிறகு இந்த உலகத்துக்கும், நம் சமுதாயத்துக்கு எதை விட்டு செல்கிறோம் ஒன்றுமே இல்லை. ஆனால், நாம் கண் தானம் செய்வதால் நம் கண்கள் மூலம் இந்த உலகத்தை இருவர் பார்த்து ரசிக்க வழிவகை செய்கிறோம். கண் தானம் செய்ததன் மூலம் எனக்கு ஒரு திருப்தி கிடைத்துள்ளது. இதுவே எனக்கு போதும்"
என்றார் பெருமையுடன்.இதேபோல் பி.காம் முதலாம் ஆண்டு மாணவி சுபஸ்ரீ கூறும்போது,
''எங்கள் கல்லூரியை சேர்ந்த 120 பேர் கண் தானம் செய்துள்ளது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கண்களை ஒருவர் இறந்த ஆறு மணி நேரத்துக்குள்ள எடுத்து பயன்படுத்த வேண்டும். ஹெச்.ஐ.வி., ஹெபடைடிஸ்-பி தொற்று இருப்பவர்கள் தவிர்த்து மற்றவர்கள் கண் தானம் செய்யலாம்"
என்று கண் தானம் பற்றிய தகவல்களை கூறினார்.கண் தானத்தால், பார்வை இழந்தவர்கள் இந்த உலகத்தை பார்க்க உதவ முன்வந்துள்ள இந்த செட்டிநாட்டுப் பெண்களுக்கு சபாஷ் போடலாம் தானே...!
No comments:
Post a Comment