Monday, 18 August 2014

நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் ஏன்?

உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதிகளை நியமிப்பதற்கு புதிதாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாபுதியது என்பதால் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் தேவை.ஆளும் BJP கூட்டணிக்கு மக்களவையில் இந்த பலத்தைப் பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியின் திருத்தம் ஒன்றை ஏற்றுக் கொண்டது. அதாவது நீதிபதிகள் நியமனத்தின்போது ஆணையம் ஒரு பட்டியலை அனுப்பி அதனைக் குடியரசுத்தலைவர் மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஆணைய உறுப்பினர்கன் ஏகமனதாக மீண்டும் திருப்பி அனுப்பினால்தான் அதனைக் குடியரசுத் தலைவர் கட்டாயம் ஏற்க வேண்டும் என்று மசோதாவில் இருந் தது.ஆனால், பெரும்பான்மை உறுப்பினர்கள்  ஆதரவு இருந்தாலும் அந்தப்பட்டியலைக் குடியரசுத் தலைவர் ஏற்க வேண்டும் என்ற திருத்தத்தைக் காங்கிரஸ் கொண்டு வந்தது. இந்த திருத்தத்தை அரசு ஏற்றுக் கொண்டு காங்கிரசின் ஆதரவைப் பெற்றுவிட்டது. ஆனால் நீதித்துறை நியமனம் மட்டுமின்றி நீதிபதிகள் மீதான புகார்கள் பற்றியும் விசாரிக்கும் வகையில் ஆணையத்தின் வரம்பு விரிவாக்கப்பட வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தம் ஏற்கப்படவில்லை. ஒருவழியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 367 வாக்குகளுடன் மசோதா நிறைவேறி யது.
இந்த வாக்கெடுப்பில் அதிமுக கலந்து கொள்ளவில்லை. அடுத்த நாள் மாநிலங்களவையில் இதே மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது ஆளும் கூட்டணிக்கு பதற்றம் ஏற்பட்டது. காரணம் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற ஆளும் கூட்டணிக்கு பலமில்லை. அதிமுக வின் ஆதரவு கட்டாயம் தேவை. இதனால் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வெங்கய்யா நாயுடு, அருண்ஜெட்லி ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளருடன் பேசியிருக்கிறார்கள்.மாநிலங்களவையில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி அதிமுக உறுப்பினர் மைத்ரேயனை அழைத்துஅம்மாஎன்ன சொன்னார்? சம்மதம் தெரிவித்தாரா? என்று கேட்டிருக் கிறார்.அம்மாஇசைவு தெரிவித்ததை பிரதமரிடம் மைத்ரேயன் கூறியிருக்கிறார். இதனை ஒலி வாங்கியில் கேட்டதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதன்பிறகுதான் பிரதமரும், சட்ட அமைச்சரும் நிம்மதி அடைந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வெங்கய்யா நாயுடு-வை அணுகி தனது மகிழ்ச்சியை ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருக்கிறார். இதன்பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிமுக ஆதரவுடன் 172 உறுப்பினர்கள் வாக்களித்து மசோதா நிறைவேறி இருக்கிறது. முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத் மலானி இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்திருக்கிறார்.
அதிமுக வின் 11 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் கூட மசோதா நிறைவேறுவது சந்தேகம்தான்.முதல் நாள் மக்களவையில் இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் அதிமுக கலந்து கொள்ளாதது ஏன்? அடுத்த நாள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தது ஏன்? மசோதாவில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் பாஜக-அதிமுக தலைவர்களிடையே என்ன பேரம் நடந்தது? இதற்கு வெளிப்படைத் தன்மை பற்றி பேசும் பாஜக தலைமை விளக்கம் அளிக்குமா? ---தீக்கதிர்.

No comments: