ராஜம் கிருஷ்ணன் அவர்கள் இவரைப் பற்றி நெக்குருகி எழுதியுள்ளார். தனது பாதையில் பதிந்த அடிகள் என்ற நூலின் அறிமுகத்தில் அவர் இவரைப் பற்றிச் சொல்லி வரும் போது நாம் ஏன் இவர் வாழ்ந்த காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் பிறக்கவில்லை என்று முற்போக்கு எண்ணம் கொண்ட ஆணும் பெண்ணும் ஏங்குவது இயல்பாகத் தோன்றும். இவரைப் பற்றி ஏராளமான நாட்டுப்புறப்பாடல்கள் உள்ளன. நாட்டுப்புறப்பாடல்கள் என்றவுடன் இவர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று எண்ணிவிட வேண்டாம். இவர் தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மண்ணில் பிறந்து, ஏழை எளியவர்களுக்காக போராடிய வீராங்கனை. பெண்கொடுமையை எதிர்த்தும், நிலப்பிரபுக்களின் கொடுமைகளை எதிர்த்தும் போராடியவர் இவர் .
அவரைப் பற்றிய ஒரு நாட்டுப்புறப்பாடல் இவ்வாறு சொல்கிறது : கோட்டை இடிஞ்சி விழ/ கொடி பிடிச்சி அம்மா வந்தா; / சாட்டையடிக்கு முன்னே/ சாகசங்கள் செய்து வந்தா ! / மதிலுகள் சரிஞ்சு விழ/ மணியம்மா அங்கே வந்தா/ பதிலுகள் கேட்டு வந்தா/ பட்டமரம் தழைக்க வந்தா/ ஏழைக்குலம் குளிரும்/ எங்கம்மா பேரு சொன்னா!/ மக்கள் குலம் குளிரும்/ எங்கம்மா பேரு சொன்னா! மக்கள் குலம் விளங்கும்/ மணியம்மா பேரு சொன்னா! . ஆம், அம்மாசிக்கூட்டத்தில் முகிழ்த்த பெண்நிலா வேறு யாருமல்ல , மணியம்மாள்தான்.இவரை தஞ்சைப்பகுதியில் மணலூர் மணியம்மாள் என்று சொன்னால்தான் புரியும். இவருடைய இயற்பெயர் வாலாம்பாள். நாகப்பட்டினத்தின் செல்வந்தர் குஞ்சிதபாதம் இவரை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். இருவருக்கும் இடையில் 25 வயது வேறுபாடு. இளம்வயதுப் பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட போதும் இவர் அவருக்கு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார். இவரும் நிறையப் படித்தார். அதிகமாக சிந்தித்தார். 17 ஆண்டுகளில் இவர் மணவாழ்க்கையை இழந்தார். பிராமண குல வழக்கப்படி இவருக்கு மொட்டை அடித்து வெள்ளை உடை அணிவித்து மணலூருக்கு அழைத்து வந்தனர். இவருடைய கல்வி தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்கத் தூண்டியது. பெண்கள் குறித்து பெரியாரின் கருத்துக்கள் இவரை பெரிதும் ஈர்த்தன. தஞ்சைக்கு வந்த காந்தியை இவர் சந்தித்தார்.
இவர்களின் தாக்கம் ஒரு பெண்ணை புரட்சியாளராக மாற்றியது. தலைமுடியை வளர்த்து கிராப் வெட்டிக்கொண்டார். சேலையைத் துறந்தார். வேட்டி ஜிப்பாவுக்கு மாறினார். வீட்டையும், ஊரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். தனக்கென, தனியான அடையாளத்தை இவர் வகுத்துக் கொண்டார். தேச விடுதலைப்போரால் ஈர்க்கப்பட்ட இவர் காங்கிரசில் இணைந்தார்.ஊராரால் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்களோடு இவர் சேர்ந்து கொண்டார். அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார். அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தந்தார். தான் சேர்ந்திருந்த காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்களிடம் இருந்த முரண்பாடுகளும், சுரண்டல் குணமும் இவரை ஆத்திரம் கொள்ள வைத்தது. அவர்களை எதிர்த்து இவர் போராடினார். காங்கிரஸ் நிலப்பிரபுக்கள் இவரை தீர்த்துக் கட்டி விட முனைந்தனர். அந்த வேளையில் பி.சீனிவாச ராவ் நடத்திய விவசாயிகள் இயக்கப்போரில் இணைந்து கொண்ட மணியம்மை 1940களில் அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
விவசாயத் தொழிலாளிகளுக்கு அமாவாசை அன்று தான் விடுமுறை என்பதால் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் அமாவாசை அன்று தான் நடக்கும். சீனிவாச ராவோடு இணைந்து தோளோடு தோள் நின்று போராடியவர்களில் மணலூர் மணியம்மாள் குறிப்பிடத்தக்கவர். கம்யூனிஸ்ட் கட்சியின் சிறு பிரசுரங்களை விற்கும் பணியை இவர் தனக்கு அளித்தார் என்று குத்தூசி குருசாமி தனது நினைவலைகள் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் அடிமைத்தனமாக வாழ்வதையும், விதவைகள் கொடுமையையும் எதிர்த்து இவர் போராடினார். சிறுவர்கள் பொது இடத்தில் மண் அள்ளியதற்காக அவர்களை அடித்த கார்வாரியின் கையை இவர் வெட்டினார்.பெண்களுக்கு சைக்கிள் ஓட்டவும்,தற்காப்புக் கலைகளையும் தானும் கற்றுக்கொண்டு பிற பெண்களுக்கும் கற்பித்தார். நிலப்பிரபுக்களால் பண்ணையடிமைப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்வதை எதிர்த்து இவர் போராடினார். விவசாயிகள், பாட்டாளிகள் மத்தியில் இவர் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார். அவர்களுக்காக அவர் பல போராட்டங்களை திறம்பட நடத்தினார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் இவர் சிறையில் அடைக்கப்பட்டார். போராளி எங்கு சென்றாலும் ஓய மாட்டார் என்பதை அவர் சிறையிலும் நிரூபித்தார். அங்கு கைதிகளுக்காகவும், அவர்களின் குழந்தைகளுக்காகவும் போராடினார். சிறையில் இருந்து வெளியே வந்த மணியம்மாள், 1953ம் ஆண்டில் ஒரு கிராமத்தில் ஏற்பட்ட விவசாயிகள் பிரச்சனையை தீர்ப்பதற்காகச் சென்றார்.
அவர் விவசாயிகளிடம் எக்காரணம் கொண்டும் உங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். கூட்டம் முடிந்து பேருந்துக்காக சாலையில் காத்திருந்த அவர் மான் கொம்பு ஒன்றால் குத்தப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அந்த மான் கொம்பு யாருடையது? அதைக் கொண்டு கொலை செய்தவர் யார் என்பது இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எளிய மக்களுக்காக, விவசாயிகளுக்காக, பெண் கொடுமையை எதிர்த்து போராடிய மணியம்மாள் போராளிகளின் நெஞ்சில் என்றும் நீக்கமற நிறைந்திருந்து வழிகாட்டுவார்.
No comments:
Post a Comment