மத்திய திட்டக்குழு கலைக்கப்படும் என்று பிரதமர் மோடிஅறிவித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்என்றும் CPI(M)
கட்சி கூறியுள்ளது.திட்டக்குழுவை கலைத்து விட்டு அதற்கு பதிலாக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மாற்று வழி ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையின் போது அறிவித்தார்.மத்திய திட்டக்குழு என்பது 1950ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான மிக முக்கிய அமைப்பு ஆகும். ஜவஹர்லால்நேரு தலைமையில் முதன்முதலாக செயல்படத் துவங்கிய திட்டக்குழு, நாட்டின் ஐந்தாண்டு திட்டங்களை வரையறை செய்வதிலும் செயல்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகித்து வருகிறது. மத்திய அரசின் சமூக நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமின்றி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட அடிப்படையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், பல்வேறு வடிவங்களில் மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மானியங்கள், மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதி ஒதுக்கீடுகள், ஐந்தாண்டுத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் படிப்படியாகக் கைவிட்டு முழுக்க முழுக்க நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை கார்ப்பரேட்மயமாக்க துடிக்கும் மோடி அரசு, ஒட்டுமொத்தமாக திட்டக்குழுவையே கலைத்துவிடுவது என்ற யோசனைக்கு வந்திருக்கிறது.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., பிரதமர் மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக விமர்சித்துள்ளார்.
திட்டக்குழு கலைக்கப்படும் என்றால், அக்குழுவின் மூலம் அமல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை இனி செயல்படுத்துவது யார்? அதனை கண்காணிப்பது யார் என்று சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார். ‘வறுமை ஒழிப்பு பற்றி மோடி பேசுகிறார். ஆனால், மக்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி முறையாக பேசுவதற்கு நரேந்திர மோடி தவறிவிட்டார்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா எம்.பி. விமர்சித்துள்ளார். பணவீக்கம், கறுப்புப் பணம் பதுக்கல் உள்ளிட்டவற்றிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது பற்றி அரசுக்கு இருக்கும் பொறுப்புகள் பற்றி எதையும் மோடி பேசவில்லை என்றும் து.ராஜா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment