கியூபப்புரட்சியின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் 88வது பிறந்தநாள் புதனன்று கியூபாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கியூபத் தலைநகர் ஹவானாவில்சிலி நாட்டைச் சேர்ந்த பிரபல கலைஞர் ராபர்ட்டோ சிலி, காஸ்ட்ரோவின் அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியை அமைத் திருந்தார். அதில் இடம் பெற்றிருந்த காஸ்ட்ரோவின் ஓர் அழகிய ஓவியம்.
‘தோழர் பிடலை கவுரவப் படுத்துவது என்பது எனக்குக் கிடைத்த பெரும் பேறு. பிடல் என்றால் பிடல்தான் அவருக்கு நிகர் யாருமில்லை’ என்று பெருமிதம் பொங்க குறிப்பிட்டார் சிலி நாட்டைச் சேர்ந்த கலைஞர் ராபர்ட்டோ சிலி. கியூபத் தலைநகர் ஹவானாவில் ஆகஸ்ட் 12 செவ்வாயன்று ஒரு மாபெரும் புகைப்படக் கண்காட்சியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இந்தப்புகைப்படக் கண்காட்சியை வடிவமைத்தவரும் அவரே. கியூபப் புரட்சியின் நாயகனும், உலகெங்கிலும் உள்ள புரட்சியாளர்கள் மற்றும் சமூகப் போராளிகளின் ஈர்ப்பு சக்தியாக என்றென்றும் திகழும் மகத்தான அந்தத் தலைவரின் 88வது பிறந்த நாள் ஆகஸ்ட் 13 புதனன்று கியூபாவிலும் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது. பிடலின் பிறந்தநாளையொட்டி அவரை கவுரவிக்கும் விதமாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரபலமான திரை மற்றும் புகைப்படக் கலைஞரான ராபர்ட்டோ சிலி, பல்வேறு தருணங்களில் பிடல் காஸ்ட்ரோவை தனது கேமராவில் பிடித்த அரிய புகைப்படங்களுடன் இந்தக்கண்காட்சியை அமைத்திருந்தார்.ஒரு ராணுவத் தளபதி என்ற முறையில் மிடுக்கான ஆலிவ் பச்சை நிற ராணுவ உடையுடனும், ஒரு புரட்சிகர அரசியல் தலைவர் என்றமுறையில் அதற்கே உரிய கம்பீரத்துடனும் கியூப மக்களின் அன்பைப்பெற்ற ஒரு தந்தையைப் போன்றவர் என்ற முறையில் அன்பொழுகும் சிரிப்புடனும்... என பல்வேறு கோணங்களில் இந்தப் புகைப்படக் கண்காட்சியில் காஸ்ட்ரோ இடம்பெற்றிருக்கிறார். ஹவானாவில் உள்ளஜோஸ் மார்ட்டி நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை கியூபாவின் மூத்த தலைவர்கள், அரசுத் தலைவர்கள், பல்லாயிரக்கணக்கான கட்சித் தோழர்கள், இளம் கம்யூனிஸ்டுகள், ஆயிரமாயிரம் மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.
கியூபாவில் மட்டுமல்ல, இதேபோன்ற கண்காட்சி ஜெர்மனி தலைநகர் பெர்லினிலும் செவ்வாயன்று மாலை திறக்கப்பட்டது. அங்கும் இளைஞர்களின் பெரும் கூட்டம் அலைமோதியது. 1926ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கியூபாவின் பிரான் நகரில் ஒரு ஸ்பானிய அகதிகள் குடும்பத்தைச் சேர்ந்த ஏஞ்செல் காஸ்ட்ரோவுக்கும், கியூப விவசாயியான லினா ரஸ்சுக்கும் பிறந்தவர் பிடல் காஸ்ட்ரோ. கியூபாவில் ஏகாதிபத்திய ஆதரவு பாடிஸ்டா ஆட்சியை மகத்தான புரட்சியின் மூலம் தூக்கியெறிந்து என்றென்றும் உலகிற்கு வழிகாட்டும் சோசலிசப்புரட்சிக்கு தலைமை ஏற்றவர்.2006ம் ஆண்டில் கியூப ஜனாதிபதி என்ற பொறுப்பை கட்சியின் அடுத்த தலைமையிடம் ஒப்படைத்து விட்டு ஓர் எளிய குடிமகனாக ஹவானாவில் வாழ்ந்து வருகிறார். காஸ்ட்ரோவின் பிறந்த நாள் கியூபாவைத் தாண்டி உலகின் பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி, அந்நாட்டில் உள்ள 168 நகரங்களிலும் மிகப்பெரும் இளைஞர் கலாச்சார விழாவாக இதைக்கொண்டாடியது. காஸ்ட்ரோவின் பிறந்த நாள் கொண்டாட்டம், ஒரு தனிநபரின் கொண்டாட்டமாக அல்ல... கியூபப் புரட்சியின் உணர்வுகளை மீண்டும் நெஞ்சில் ஏந்திக்கொள்ளும் கொண்டாட்டம்; எதிர்காலம் சோசலிசமே என்பதை உரத்துச்சொல்லும் கொண்டாட்டம் என்கிறார் காஸ்ட்ரோவின் புகைப்படக் கண்காட்சியை அமைத்த கலைஞர் ராபர்ட்டோ சிலி.
No comments:
Post a Comment