Wednesday, 20 August 2014

தாய்த் தமிழுக்கு நீதி கேட்டு தமுஎகச சார்பில் -அறப்போர்.

தாய்த் தமிழுக்கு நீதி கேட்டு எழுத்தாளர்கள், கலைஞர்கள் உண்ணாநிலை அறப்போர்
தமுஎகச சார்பில் மதுரையில் நடைபெறுகிறது

அரசியல் சாசனத்தில் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும், அனைத்து நிலைகளிலும் சமமான வாய்ப்பும், நீதியும் வழங்க வேண்டும். பள்ளிக் கல்வியில் தமிழை மொழிப்பாடமாக கட்டாயம் படிக்க சட்டமியற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஆக-24 ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலந்தழுவிய அளவில் உண்ணாவிரதப்ராட்டம் நடைபெறுகிறது.இந்தியும், சமஸ்கிருதமும் மட்டுமல்ல இந்தியா. அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கும் ஜனநாயகத்தை மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும். நிர்வாகத்தில், நீதித்துறையில், கல்விச்சாலையில், வழிபாட்டுத் தலத்தில் தமிழ் மொழியே நிலைபெற்றிட செயல் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து நடவ டிக்கையில் இறங்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி யாக அறிவிக்க வேண்டும்.தமிழக அரசின் அலுவலகங்களில் தமிழ் நிர்வாக மொழியாக முழுமையாக மாற்றப்பட வேண்டும். துவக்க கல்வியில் இருந்து உயர்கல்வி வரை தமிழில் தடையின்றி படிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்துவதோடு, தமிழ்வழியில் பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்புக்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் தமிழ், கல்வி மொழியாக, நீதி மொழியாக, நிர்வாக மொழியாக, வழிபாட்டு மொழியாக விளங்கிட வகை செய்ய வேண்டும். தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் தமிழே தலைமைத் தாங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமுஎகச மாநிலக்குழு சார்பில் இப்போராட்டம் நடத்தப்படுகிறது. மதுரை காளவாசலில் ஆக-24 ம் தேதி காலை 9 மணியளவில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயரிடக்கோரி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் நினைவரங்கில் நடைபெறும் இப்போராட்டத்திற்கு அமைப்பின் மாநிலத்தலைவர் .தமிழ்ச்செல்வன் தலைமை வகிக்கிறார். மதுரை மாநகர் மாவட்டத்தலைவர் .கவிதா குமார் வரவேற்புரையாற்றுகிறார்.
தமிழறிஞர் தமிழண்ணல் துவக்கவுரையாற்றுகிறார். சங்கத்தின் கவுரவத்தலைவர் பேரா.அருணன் போராட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசுகிறார். மாநிலப்பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் நிறைவுரையாற்றுகிறார். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளன தலைவர் பொன்னீலன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து உரையாற்றுகிறார். மாநகர் மாவட்டச்செயலாளர் ..சாந்தாராம் நன்றி கூறுகிறார்.மதுரை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை, செந்தமிழ்க் கல்லூரி செயலாளர் கோச்சடை இரா.குருசாமி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.நேரு, மூட்டா, இரண்டாம் மண்டல பொருளாளர் பேரா.பெ..பெரியசாமி, திராவிடர் கழக தென் மாவட்ட பிரச்சாரக்குழு அமைப்பாளர் தே.எடிசன்ராசா, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலப்பொதுச்செயலாளர் என்.முத்து அமுதநாதன், புரட்சி கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். தமுஎகச மாநிலத்தலைவர்கள் உரையாற்றும் இப்போராட்டத்தில் கவிச்சரம் - பாடல்கள் - நாடகம் - தப்பாட்டம் ஆகியவை இடம்பெறுகின்றன. மாநிலம் முழுவதுமிருந்து படைப்பாளிகள்- கலைஞர்கள் இந்த உண்ணாநிலை அறப்போரில் பங்கேற்கின்றனர்.

No comments: