Monday 25 August 2014

தமிழுக்கு நீதி கேட்டு எழுத்தாளர்கள் உண்ணாநிலை...

தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு பள்ளிகளில் (CBSE) செம்மொழித் தமிழ் வாரம் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர்-17 ம் தேதி சென்னை அண்ணாநகரில் உள்ள மத்திய அரசு பள்ளிகளின் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.தமிழுக்கு நீதி கேட்டு தமுஎகச சார்பில் மதுரையில் நடைபெற்ற உண்ணாநிலை அறப்போரின் போது நிறைவுரையாற்றிய சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் பலத்த கைதட்டலுக்கு இடையே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.அரசியல் சாசனத்தில் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும், அனைத்து நிலைகளிலும் சமமான வாய்ப்பும், நீதியும் வழங்க வேண்டும். பள்ளிக் கல்வியில் தமிழை மொழிப்பாடமாக கட்டாயம் படிக்க சட்டமியற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலந்தழுவிய அளவில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.மதுரை காளவாசலில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயரிடக்கோரி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகிசங்கரலிங்கனார் நினைவரங்கில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அமைப்பின் மாநிலத்தலைவர் .தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மதுரை மாநகர் மாவட்டத்தலைவர் .கவிதா குமார் வரவேற்றுப் பேசினார். தமிழறிஞர் தமிழண்ணல் துவக்கவுரையாற்றினார். சங்கத்தின் கவுரவத்தலைவர் பேரா.அருணன் போராட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். மாநிலப்பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் நிறைவுரையாற்றினார். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளன தலைவர் பொன்னீலன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து உரையாற்றினார். மாநகர் மாவட்டச்செய லாளர் ..சாந்தாராம் நன்றி கூறினார்.முன்னதாக, மதுரை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை, செந்தமிழ்க் கல்லூரி செயலாளர் கோச்சடை இரா.குருசாமி, பகுத்தறிவாளர் கழகத்தலைவர் நேருமூட்டா, இரண்டாம் மண்டலபொருளாளர் பேரா.பெ..பெரியசாமி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலப்பொதுச் செயலாளர் என்.முத்து அமுதநாதன், புரட்சி கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமுஎகச மாநிலத்தலைவர்கள் எஸ்..பெருமாள், என்.நன்மாறன், தேனிசீருடையான், ஆர்.நீலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நந்தலாலா, நா.முத்துநிலவன், இரா.தெ.முத்து,மயிலைபாலு, மதுக்கூர் இராமலிங்கம், லெட்சுமணப்பெருமாள் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர்.கவிஞர்கள் நவகவி, ஜீவி, ஸ்ரீரசா, வெண்புறா, ஆரிசன்,கோவை முத்து ஆகியோர் கவிதை வாசித்தனர். கரிசல் கிருஷ்ணசாமி, திருவுடையான், கருணாநிதி, இராயப்பன் ஆகியோர் பாடல்கள் பாடினர். உண்ணாவிரதத் துவக்கமாக தப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதுமிருந்து 600க்கும் மேற்பட்ட படைப்பாளி கள்- கலைஞர்கள் இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தில் பங்கெடுத்தனர். நிகழ்ச்சியை கருணா தொகுத்து வழங்கினார். முன்னதாக காளவாசலில் அமைந்துள்ள தமிழ்த்தென்றல் திருவிக சிலைக்கு எஸ்..பெருமாளும் தமிழ்த்தியாகி சங்கரலிங்கனார் உருவப்படத்திற்கு என்.நன்மாறனும் மாலைஅணிவித்து மரியாதை செய்தனர்.
தமிழுக்கு நீதி கேட்டு மதுரையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நமது BSNLL ஊழியர் சங்கத்தின் சார்பாக, தோழர்கள் எம்.சௌந்தரராஜன்,என்.செல்வம்,எம்.சிவராமன், மற்றும் எஸ்.சூரியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments: