Wednesday, 1 June 2016

19வது முறையாக விலை உயர்வு . . .

பெட்ரோல் - டீசல் வரிகளை உயர்த்தி மக்களை கொள்ளையடிக்கிறது மோடி அரசு CPI(M)கடும் கண்டனம்
பெட்ரோல் - டீசல் விலையை மத்திய அரசுஇடைவிடாமல் உயர்த்தி வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:பதினைந்து நாட்களுக்குள்ளாகவே மீண்டும் ஒருமுறை பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்தி இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 2.50ம், டீசல் விலை ரூ.2.26ம் உயர்த்தப்பட்டிருக்கிறது.மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் டீசலின் விலை 19ஆவது முறையாகவும், பெட்ரோலின் விலை 16ஆவது முறையாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஈராண்டு காலம் ஆகிவிட்டதை மிகவும் படாடோபமாகவும் ஊதாரித்தனத்துடனும் கொண்டாடிக்கொண்டிருக்கிற அதே சமயத்தில்தான் இவ்வாறு பெட்ரோல் - டீசல் விலைகளும் உயர்த்தப்பட்டு மக்களின்மீதான சுமைகளை மேலும் அதிகரித்துள்ளது. அரசாங்கம் வீணாகச் செய்திடும் செலவினங்களுக்கான சுமையை மக்கள் மீது வலுக்கட்டாயமாக ஏற்றியிருக்கிறது. வேளாண் நெருக்கடி கடுமையான முறையில் மேலும் ஆழமாகி இருக்கக்கூடிய இந்தசமயத்தில், டீசலின் விலையை உயர்த்தி இருப்பது நெருக்கடியை மேலும் மோசமாக்கிடும். நிலத்தடி நீரை குழாய்கள் மூலம் வெளிக்கொணர்வதற்கான பிரதான எரிபொருள் டீசலாகும். நாட்டில் பெரும்பான்மையான பகுதிகள் வறட்சியால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கக்கூடிய நிலையில், குடிதண்ணீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், இந்த உயர்வு மக்களின் வாழ்வாதாரங்களை மேலும் மோசமாக்கிடும். அரசாங்கம், பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளைத் தொடர்ந்து உயர்த்திலாபம் ஈட்டிக் கொண்டிருக்கிறது.பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை நிர்ணயக் கட்டுப்பாடுகளை நீக்கியபோது அரசாங்கம் என்ன சொன்னது தெரியுமா? வரிகள் பூஜ்யத்திற்கு வந்து விடும் என்றுசொன்னது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.25.31 கொடுக்கும் அதே சமயத்தில், அதே பெட்ரோலை மக்களுக்கு ரூ. 65.60 க்கு விற்கிறது. வேறுபாட்டை அரசாங்கம் வருவாயாக அறுவடை செய்து கொள்கிறது.
கடந்த ஈராண்டுகளில் மட்டும் கலால் வரிகள் ஐந்து முறை உயர்த்தப்பட்டிருக்கின்றன.பணக்காரர்களுக்குத் தொடர்ந்து வரிச் சலுகைகளை அளித்து வரும் அரசாங்கம் அதேசமயத்தில் மக்கள் மீது தொடர்ந்து சுமையினை ஏற்றி, தன்னைக் கொழுக்க வைத்துக் கொள்வதை ஏற்க முடியாது. இந்த விலை உயர்வைக் கண்டித்திட வேண்டும் என்றும், மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதாரச் சுமைகளைஏற்றி இருப்பதற்கும் எதிராகக் கண்டன இயக்கங்களை நடத்திடுமாறும் அனைத்துக் கிளைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவி அழைக்கிறது.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியிருக்கிறது.

1 comment:

AYYANARSAMY.R said...

அனைவருக்கும் வணக்கம்.
பெட்ரோல்-டீசல்-தொடர் விலை உயர்வு, கல்வி கட்டணங்களில் கொள்ளை, நவீன மருத்துவம் என்ற பெயரில் நடுங்க வைக்கும் கட்டணக் கொள்ளை, காசு கொடுத்து குடிக்கும் தண்ணீருக்கும் கை ஏந்தும் அவலம் இவைகள் ஏதோவொரு முதலாளி பயன் பெறுவதற்காக ஓட்டு போட்டு நமக்கு நாமே தேர்ந்தெட்டுத்த நமது இந்திய அரசின் சாதனைகள். அன்று அன்னியர்களிடம்மிருந்து பெற்ற விடுதலை - இன்று நம்மை நாமே ஆள்வதாக கூறிக்கொள்ளும் நமது அரசுகளின் பெயரால் பொதுமக்கள் வஞ்சகமாக சுரண்ட்டப்பட்டு ஆண்டியாகும் அவலம் தான் சுதந்திரமா? மக்கள் நலன் காக்கும் இடதுசாரிகள் போராட்டம் வெல்லட்டும்.