Friday 16 December 2016

2 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தம் பிஎஸ்என்எல் நிறுவனத்தை துண்டாட முயலும் மோடி அரசுக்கு எச்சரிக்கை...

                  கொல்கத்தாவில் மற்றும் மதுரையில் நடைபெற்ற போராட்ட ஆர்ப்பாட்டம் 
நாட்டின் மிகப் பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனமாம் பிஎஸ் என்எல் நிறுவனத்தை துண்டாடி சீர்குலைக்கும் நோக்கத்துடன் துணை டவர் நிறுவனம் அமைத்திட மத்திய அரசு முயற்சிப்பதை எதிர்த்து டிசம்பர் 15 வியாழனன்று நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் நாசகர முயற்சிகளுக்கு எச்சரிக்கை விடும் விதத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கேற்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து பிஎஸ்என்எல் அலுவலகங்களிலும் பணிகள் ஸ்தம்பித்தன. பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் விடுக்கப்பட்ட அறைகூவலை ஏற்று, நாடு முழுவதும் உள்ளபிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகங்கள், தலைமை பொது மேலாளர் அலுவலகங்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளிட்ட அனைத்து மையங்களும் இந்த வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடின.
தொலைத்தொடர்பு துறையில் டவர் மூலமான வர்த்தகம் மிகவும் லாபகரமானது ஆகும். நாடு முழுவதும் 65 ஆயிரம் மொபைல் டவர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளன.இவற்றை தனியார் பெரும் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளை லாபம்சம்பாதிக்க வைக்கும் நோக்கத்துடன் துணை டவர் நிறுவனம் ஒன்று அமைத்து, அதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தை துண்டாடி சீர்குலைக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதை எதிர்த்தே, இந்த மாபெரும் வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.
துணை டவர் நிறுவனம் அமைப்பது என மத்திய தொலைத்தொடர்பு துறை சார்பில் மத்திய அமைச்சரவைக்கு குறிப்பு அனுப்பப்பட்டதை தொடர்ந்து அவசர ஆலோசனை நடத்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்சங்கங்கள், வேலைநிறுத்த போராட்டத் தின் மூலமாக அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதென, அந்த அறைகூவலை ஏற்று பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த மிகப் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அரசு தனது முடிவை கைவிடாவிட்டால், இந்தப் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும், வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறசெய்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிப்பதாகவும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.அபிமன்யூ தெரிவித்துள்ளார்.நன்றி தீக்கதிர்.

No comments: