Friday, 20 February 2015

இன்சூரன்ஸ்,ரயில்வே,பாதுகாப்பு, துறையில் அந்நியரை எதிர்ப்போம்!

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதமாக அதிகரிக்கவும், அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு வழிவகை செய்வதற்குமாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 21வது மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.நாடாளுமன்றத்தில் 6 ஆண்டுகளாக நிலுவையிலேயே உள்ள இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா குறித்த விவாதத்தை அங்கு நடத்தாமல், குளிர்காலக் கூட்டத் தொடர் முடிந்த மறுநாளே அவசரச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோதமானது ஆகும்.அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு பன்னாட்டு மூலதனத்தை மகிழ்விக்க எடுக்கப்பட்ட அரசியல் முடிவே இது. 2008- உலக நெருக்கடிக்குப் பின்னர் அமெரிக்காவிலும், வளர்ந்த நாடுகளிலும் பன்னாட்டு வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் பல திவாலாகின. இந்தியாவில் டாட்டாவோடு கூட்டுத்தொழிலில் ஈடுபட்ட அமெரிக்கன் இண்டர்நேசனல் குரூப்(..ஜி) திவாலின் விளிம்புக்கு சென்ற போது அமெரிக்க அரசாங்கமே அதன் 80 சதவீதப் பங்குகளை வாங்கி காப்பாற்றியது.
ரூ.11 லட்சம் கோடி கொடுத்த எல்ஐசி
அந்நிய முதலீடு வருகை இந்திய அரசின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கான நிதி திரட்டலுக்கு உதவும் என்கிற வாதத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை. 11-வது ஐந்தாண்டு திட்டத்திற்கு எல்..சி மட்டும் அளித்த தொகை ரூ.7,04,000 கோடிகள். 12 வது திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே ரூ.4,50,000 கோடிகளை எல்..சி அளித்துள்ளது. ஆனால் அந்நிய முதலீடு 26 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இன்சூரன்ஸ் துறைக்கு வந்துள்ள அந்நிய முதலீடுகள் ரூ.7500 கோடிகளுக்கும் கீழேதான்.எனவே இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவை அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பலப்படுத்துவதுதானே தவிர அந்நிய முதலீட்டு அதிகரிப்பல்ல என இம்மாநாடு சுட்டிக் காண்பிக்கிறது.டிசைகளுக்குப் போகாத தனியார்இன்சூரன்ஸ் பரவலாக்கலுக்கு வழிவகுப்பதே போட்டியை ஊக்குவிப்பதன் நோக்கம் என்பது அரசின் வாதம். ஆனால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கிராமங்களுக்கோ, குடிசைகளுக்கோ போகவில்லை என்பதுதான் போட்டி அனுமதிக்கப்பட்ட 14 ஆண்டு கால அனுபவம். ஓராண்டு காலத்தில் எல்..சி புதிய அலுவலகங்களைத் திறந்துள்ள சிற்றூர்களின் எண்ணிக்கை 1313. இதே காலத்தில் 24 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூடியுள்ள கிளைகள் 732. ஏற்கனவே அந்த மூன்று முக்கியமான அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் - அமெரிக்காவின் ..ஜி, ஆஸ்திரேலியாவின் .எம்.பி, நெதர்லாந்தின் .என்.ஜி- இந்திய இன்சூரன்ஸ் கூட்டுத்தொழிலை விட்டு வெளியேறிவிட்டன. லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்ட அந்நிய முதலீடுகள் இன்சூரன்ஸ் பரவலாக்கலுக்கு வழிவகுக்கவே முடியாது என்பதை இந்திய அனுபவத்தில் இருந்தே இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.
10 மடங்கு அதிகரிப்பு
போட்டி வந்தால் புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் கிடைக்கும்; பிரிமியம் குறையும் என்பதெல்லாம் உண்மையல்ல என்பதே அனுபவம். டூ வீலர், ஆட்டோ, அரைபாடி லாரி போன்ற சாமானிய மக்களின் பயன்பாட்டிற்கான வாகனங்களின் மூன்றாவது நபர் காப்பீட்டிற்கான பிரிமியங்கள் தனியார்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் 10 மடங்கு அதிகரித்துள்ளன. தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மீதான புகார்களின் விகிதம் 22 பாலிசிகளுக்கு 1 என்கிற அளவுக்கு - மொத்த புகார்கள் 2,89,336- உள்ளன. எல்..சியோ 99 சதவீத உரிமப் பட்டுவாடாவோடு உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது.காப்பீட்டுத் துறையில் நாடு முழுவதும் 12 லட்சத்து 75ஆயிரம் முகவர்கள் ஆயுள் காப்பீட்டு கழகத்தை தங்களின் வாழ்வாதாரத்துக்காக நம்பி செயல்பட்டு வருகிறார்கள். பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை பலப்படுத்துவதே இவ்வளவு எண்ணிக்கையிலான முகவர்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதாக இருக்கும். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைத்து ஒரே நிறுவனமாக உருவாக்க வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
சீரழிக்கப்படும் பிஎஸ்என்எல்
இதே போல இந்திய நாட்டின் இதர துறைகளிலும் இதே அனுபவத்தையே அந்நிய நேரடி முதலீடுகள் ஏற்படுத்தியுள்ளன. மின்சாரத்துறையில் வந்த அந்நிய நிறுவனங்கள் என்ரான், ஏஇஎஸ் கார்ப்பரேசன் போன்றவை தோல்வியைத் தழுவின. பிஎஸ்என்எல் நிறுவனத்தை துவக்க காலங்களில் செல்பேசித் துறையில் தடுத்து அந்நிய முதலீட்டை ஊக்குவித்தபோது உள்ளே வரும் அழைப்புகளுக்கு கூட கட்டணங்கள் இருந்தன. இப்போதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைச் சீரழிக்கிற முயற்சிகள் தொடர்கின்றன. ரயில்வே துறையில் 100 சதவீதம் அந்நிய மூலதனத்திற்கு மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவிற்குள் அந்நிய வங்கிக்கிளைகள் திறப்பதற்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.அனைவருக்குமான வங்கிச்சேவை என்கிற இலக்குகளுக்கு இன்றும் பொதுத்துறை வங்கிகளே உதவுகின்றனவே தவிர அந்நிய, தனியார்களின் பங்களிப்பு ஏதுமில்லை. பொதுத்துறை நிதிகளை உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும். 2014 டிசம்பர் 22ந்தேதி கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவும் கைவிடப்படவேண்டும். இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் உள்ளதென்று அமைச்சக மட்டங்களிலுள்ள கருத்துக்களையும் மீறி பாதுகாப்புத்துறையில் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படுகிறது. ரயில்வே துறையிலும் அனுமதிக்கப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வரும் அந்நிய முதலீடுகள் சமூக நோக்குடனான செயல்பாட்டிற்கு எதிராக உள்ளன. புதிய தொழில் நுட்பத்தைப் பெரிதாகக் கொண்டு வரவில்லை. வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. ’ மேக் இன் இந்தியாமுழக்கம் இந்திய தொழிலாளர்களின் உரிமைகளையும், பயன்களையும் பறிக்கும் என்பதன் நளினமான வடிவமே ஆகும். மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு அந்நிய முதலீடுகளை ஊக்குவித்து பொதுத் துறைகளுக்கு எதிரான கொள்கைகளை வகுக்கும் வேளையில்அதற்கு எதிரான திரட்டல்களையும், கருத்துருவாக்கத்தையும் மேற்கொள்ளுமாறு அனைத்து உழைப்பாளி மக்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 21வது மாநில மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.(தீர்மானத்தை விஜயா (மதுரை) முன்மொழிந்தார்.சங்கர் (காஞ்சிபுரம்) வழிமொழிந்தார்.)

No comments: